தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

70 ஆண்டுகளுக்குப் பிறகு அம்னோ கூட்டணியிலிருந்து விலக மசீச பரிசீலனை

2 mins read
305cf9c6-641e-4b1e-a702-bdc64afd34c0
மசீச தலைவர் வி கா சியோங். - பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் 70 ஆண்டுகளாக தேசிய முன்னணிக் (Barisan Nasional) கூட்டணியில் இடம்பெற்றுவரும் மலேசிய சீனர் சங்கம் (மசீச) அக்கூட்டணியிலிருந்து விலகக்கூடிய சூழல் தலைதூக்கியுள்ளது.

மலேசியாவின் ஆகப் பழைமை வாய்ந்த கூட்டணியான தேசிய முன்னணியை நிறுவிய கட்சிகளில் ஒன்றான மசீச, தேசிய முன்னணிக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து அடுத்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். கட்சியின் பொதுக் கூட்டம் வரும் அக்டோபர் மாதமே நடைபெறக்கூடும் என்பது எதிர்பார்ப்பு.

தேசிய முன்னணிக் கூட்டணியில் ஆக அதிக ஆதிக்கம் செலுத்தும் கட்சியான அம்னோ, மசீசவைப் புறக்கணிப்பதாகக் குமுறல் எழுந்துள்ளது. மசீசவின் அடித்தள அமைப்பினரிடையே அந்தக் கருத்து நிலவுகிறது.

தேசிய முன்னணி, அக்கூட்டணியில் இடம்பெறும் ஜனநாயக செயல் கட்சிக்குச் (ஜசெக) சாதகமாக பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக மசீசவினரிடையே கருத்து நிலவுகிறது. மசீசவைவிட ஜசெகதான் மலேசிய சீனர்களிடையே அதிகம் பிரபலமாக இருந்துவருகிறது.

ஜசெகவுக்கு நாடாளுமன்றத்தில் 40 இடங்கள் உள்ளன. மலேசியாவின் ஆளும் கூட்டணிகளில் உள்ள எந்தக் கட்சிக்கும் இத்தனை இடங்கள் இருந்ததில்லை.

ஒன்றுக்கும் மேலான கட்சிகள் இடம்பெறும் பிரதமர் அன்வார் இப்ராகிமின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைமையிலான அரசாங்கத்தில் ஜசெக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மசீச, ஜசெக இரண்டும் சீனர்களின் வாக்குகளை அதிகம் பெறக்கூடியவை. நாடாளுமன்ற இடங்கள் குறித்து இரண்டுக்கம் இடையே முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது.

எனினும், மசீசவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம் உருவானது. அதனையடுத்து தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் ஆகிய கட்சிகளைக் கொண்ட ஒற்றுமை அரசாங்கம் உருவானது.

தேசிய முன்னணிக் கூட்டணிக்குத் தலைமை தாங்குபவரும் அம்னோ கட்சியின் தலைவருமான திரு ஸாஹித் ஹமிடி ஒற்றுமை அரசாங்கத்தில் துணைப் பிரதமர் பொறுப்பையும் வகிக்கிறார்.

ஒருவேளை மசீச தேசிய முன்னணியிலிருந்து விலகினால் அது, மலேசியாவின் மாறிவரும் அரசியல் சூழலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதேநேரம், ஒருவேளை மசீச, மலாய் முஸ்லிம் சமூகத்தை மைமாகக் கொண்டு செயல்படும் பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்டணியில் சேர்ந்தால் தங்களிடையேயும் கூடுதல் இனத்தவரைப் பிரதிபலிக்கும் வேட்பாளர்கள் வேண்டும் என்ற எதிர்க்கூட்டணியின் ஆசை நிறைவேறலாம்.

தேசிய முன்னணியில் தொடர்ந்து இருக்கவேண்டுமா, அப்படியென்றால் என்ன நிபந்தனைகள் வரையப்பட வேண்டும் போன்றவை குறித்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு மசீச தலைவர் வீ கா சியோங் தமது கட்சியின் மூத்தத் தலைவர்களிடம் கூறியுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

குறிப்புச் சொற்கள்