கோலாலம்பூர்: மெக்டோனல்ட்ஸ் விரைவுணவகக் குழுமம் மலேசியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ரிங்கிட்டை (S$320 மில்லியன்) முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
அத்தொகையைக் கொண்டு நூறு புதிய உணவகங்களைத் திறக்கவும், இப்போதுள்ள கிளைகளை நவீனப்படுத்தவும், மின்னிலக்கத் திறன்களை வலுப்படுத்தவும் மெக்டோனல்ட்ஸ் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் தனது கிளைகளை விரிவுபடுத்துவதுடன் எதிர்காலத்திற்குத் தயாரான மலேசிய ஊழியரணியைக் கட்டமைக்கும் மெக்டோனல்ட்ஸ் குழுமத்தின் தொலைநோக்கை இந்த முதலீடு காட்டுகிறது என்றும் அதன் மேலாண்மை இயக்குநரும் உள்ளூர்ச் செயல்பாட்டுப் பங்காளியுமான அஸ்மிர் ஜாஃபர் தெரிவித்தார்.
“அந்த ஒரு பில்லியன் ரிங்கிட்டில் 600 மில்லியன் புதிய உணவகங்களைத் திறக்கவும், 200 மில்லியன் மெக்டோனல்ட்ஸ் மலேசியா உணவகங்களைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தப்படும். எஞ்சிய 200 மில்லியன் ரிங்கிட் தொழில்நுட்ப, மின்னிலக்கத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்,” என்றும் திரு அஸ்மிர் விவரித்தார்.
கோலாலம்பூரின் ஜாலான் பாகாங் பகுதியில் புதிய உணவகம் ஒன்றின் மறுதிறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்தபோது திரு அஸ்மிர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
இதனிடையே, உரிமம் பெற்று நடத்தப்படும் கிளைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் மெக்டோனல்ட்ஸ் மலேசியா திட்டமிட்டுள்ளது. இப்போது நாடு முழுவதும் 11 உரிமதாரர்கள் 25 கிளைகளை நடத்தி வருகின்றனர். ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 70 முதல் 100ஆக உயர்த்த அது இலக்கு கொண்டுள்ளது.
மெக்டோனல்ட்ஸ் தொழிற்பயிலகத்தின் மூலமாக ஊழியரணியை மேம்படுத்துவதும் நிறுவனத்தின் முதலீட்டு உத்தியில் முக்கியத் தூணாக விளங்குகிறது என்று திரு அஸ்மிர் குறிப்பிட்டார்.
தேசிய இரட்டைப் பயிற்சி முறைமையின்கீழ் மனிதவள அமைச்சின் ஒத்துழைப்புடன் அப்பயிலகம் ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அப்பயிலகம் 2018 முதல் 5,000க்கும் மேற்பட்ட இளையர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர் தொடர்ந்து எங்களுடன் பணியாற்றி வருகின்றனர்,” என்று திரு அஸ்மிர் சொன்னார்.
அத்துடன், 2023ல் கோலாலம்பூரில் ஹேம்பர்கர் பல்கலைக்கழகப் பயிற்சி நிலையத்தை அமைத்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, மெக்டோனல்ட்ஸ் மலேசியா நிறுவனத்தின் முதலீடு மலேசியாவிலுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம் தனது உணவு, பொதியாக்கத் (packaging) தேவைகளில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டை உள்ளூரிலேயே கொள்முதல் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

