தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்டோனல்ட்ஸ் உணவு நஞ்சானதால் ஒருவர் மரணம், பலர் பாதிப்பு

2 mins read
dbe6bbb3-3ace-4953-bde9-26b68c24b9e6
மெக்டோனல்ட்சின் ‘குவார்ட்டர் பவுண்டர் ஹேம்பர்கர்’  உணவுமூலம் நுண்ணுயிர்த்தொற்று பரவியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ‘ஈ கோலை’ நுண்ணுயிர்த்தொற்று காரணமாக அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்; பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

முன்னணி விரைவுணவு நிறுவனமான மெக்டோனல்ட்சின் ‘குவார்ட்டர் பவுண்டர் ஹேம்பர்கர்’ உணவுமூலம் அந்த நுண்ணுயிர்த்தொற்று பரவியிருக்கலாம் என செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 23) அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய அந்நோய்த்தொற்று, மேற்கு அமெரிக்காவின் 10 மாநிலங்களில் 49 பேரைப் பாதித்துவிட்டது. அவர்களில் பெரும்பாலோர் கொலராடோ, நெப்ராஸ்கா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோரில் ஒரு குழந்தை உட்பட பத்துப் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுநீரகங்களில் உள்ள ரத்தக்குழாய்களைப் பாதிக்கும் ‘ஹீமோலிட்டிக் யுரிமிக்’ (hemolytic uremic) எனும் தீவிர நோய்க்குறியால் அக்குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொலராடோவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஒரே வகையான ‘ஈ கோலை’ நுண்ணுயிரி கண்டறியப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தோன்றுமுன் அவர்கள் அனைவரும் மெக்டோனல்ட்ஸ் உணவை உண்டதாகச் சொல்லப்படுகிறது.

‘ஹேம்பர்கர்’ உணவில் சேர்க்கப்பட்ட எந்த உணவுப்பொருளால் அந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

இதனையடுத்து, “எனக்கும் சரி, மெக்டோனல்ட்சைச் சேர்ந்த எல்லாருக்கும் சரி, உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்,” என்று அமெரிக்க மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோ எர்லிங்கர் ஒரு காணொளிச் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவ்வுணவை உண்டவர்களில் எவரையேனும் ‘ஈ கோலை’ தொற்றி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், உடனடியாக மருத்துவச் சிகிச்சை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்