லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவில் ஒரு காலத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோய் அங்கு மீண்டும் பரவி வருகிறது.
கலிஃபோர்னியாவிலுள்ள யுனிவர்சல் ஸ்டூடியோ கேளிக்கைப் பூங்காவிற்கு அண்மையில் வருகை புரிந்தோரிடம் தட்டம்மை தொற்று காணப்பட்டதாகக் கூறியது அத்தகவல்.
தொற்றும் தன்மையுள்ள தட்டம்மை நோய்ப் பாதிப்புடைய ஒருவர் ஜூலை 26ஆம் தேதி அந்தக் கேளிக்கை பூங்காவில் இருந்ததாக, லாஸ் ஏஞ்சலிஸ் நகர சுகாதாரத் துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 6) இரவு தனது சமூக ஊடகப் பதிவில் எச்சரிக்கை வெளியிட்டது.
ஜூலை 26ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை அந்தப் பூங்காவில் இருந்தோர், தட்டம்மைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடில் உடனடியாக மருத்துவரைக் காணவேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைகள், எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியோர், தடுப்பூசி போட்டிருந்தாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றும் அது ஆலோசனை கூறியுள்ளது.
தடுப்பூசி விகிதங்கள் குறைந்துவரும் அதே நேரம் சுகாதார அதிகாரிகள் மீதான அவநம்பிக்கை அதிகரிக்கும் சூழலில் கடந்த 35 ஆண்டுகளில் காணாத தட்டம்மை தொற்றுச் சம்பவங்களை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து, 2,318 தட்டம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி நிலையம் ஜூலை மாத இறுதியில் தெரிவித்திருந்தது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். 2025ஆம் ஆண்டு முழுவதிலும் தட்டம்மையால் 2,289 பேர் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன், சிறு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் அந்தத் தொற்றால் மரணமடைந்தனர்.
யுனிவர்சல் ஸ்டூடியோ கேளிக்கை பூங்காவிற்கு உலகெங்கிலும் இருந்து அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 8.8 மில்லியன் பேர் அந்தப் பூங்காவுக்கு வருகையளித்ததாக ஆக அண்மையில் கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2000ஆம் ஆண்டில், தடுப்பூசியின் உதவியால் அமெரிக்காவில் தட்டம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளாக மீண்டும் உருவாகி அது பரவி வருகிறது.


