தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹோ சி மின் சிட்டியில் தட்டம்மைத் தொற்றால் மூவர் மரணம்

1 mins read
bc3290e3-0fe4-408b-9b60-762aecbabe7d
ஹோ சி மின் சிட்டியில் உள்ள சிறார் மருத்துவமனை ஒன்றில் தட்டம்மைக்கு ஆளான சிறுவனுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. - படம்: வியட்னாம் செய்தி நிறுவனம் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

ஹோ சி மின் சிட்டி: வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி நகரில் தட்டம்மைக் கிருமிப் பரவல் ஏற்பட்டுள்ளது.

அந்நகரில் முதன்முறையாக தட்டம்மைக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மைக் கிருமித்தொற்றுக்கு ஆளான மூவர் மாண்டுவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

அதனைத் தொடர்ந்து, ஒன்றிலிருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் கூடுதலானோருக்குத் தட்டம்மைத் தடுப்பூசி போடும் திட்டத்தை ஹோ சி மின் சிட்டி தொடங்கும் என்று வியட்னாம் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஏற்கெனவே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோருக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய தட்டம்மைக் கிருமிப் பரவல் எவ்வளவு மோசமடையும் என்பதைப் பொறுத்து, ஐந்து வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கும் தடுப்பூசி போடப்படலாம் என்று விஎன்எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.

மருத்துவ நிலையங்கள் தட்டம்மைத் தொற்றை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளுக்கென சில பகுதிகளை ஒதுக்கும். காய்ச்சலுடன் தோலில் தடிப்பு ஏற்பட்டோருக்கு 24 மணிநேரத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை ஹோ சி மின் சிட்டியில் 353 தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2021லிருந்து 2023ஆம் ஆண்டு வரை அந்நகரில் ஒருவர் மட்டுமே தட்டம்மைத் தொற்றுக்கு ஆளானார் என்று ஹோ சி மின் சிட்டியின் நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்தது.

சென்ற வாரம் அந்நகரில் 85 பேர் காய்ச்சலுடன் தோல் தடிப்புக்கு ஆளாயினர். அவர்களில் 20 பேருக்குத் தட்டம்மைத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உலகம்வியட்னாம்கிருமிகிருமித்தொற்றுமருத்துவம்