கோலாலம்பூர்: மலேசிய சுகாதார அமைச்சு, 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் முறையில் புதிய மாற்றங்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அதன்படி, நோயாளிகளின் ஒவ்வாமை, தனிப்பட்ட தகவல்கள், மருந்துகளின் முழுமையான விளக்கங்கள் ஆகியன மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும்போது மக்களுக்கு வழங்கப்படும். அதன் விவரங்களை மலாய் மெயில் ஊடகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டுள்ளது.
தற்போதைய வழிமுறைகளை ஆய்வு செய்தபிறகு மலேசிய சுகாதார அமைச்சு அண்மையில் ஒரு சுற்றறிக்கையைப் பகிர்ந்துள்ளது. நடைமுறையில் உள்ளவற்றில் குறைபாடுகள் உள்ளதால் சட்டத்தையும், பாதுகாப்புத் தேவைகளையும் கருத்தில்கொண்டு, மாற்றங்களின் அவசியத்தை அமைச்சு வலியுறுத்தியது.
நடப்பில் உள்ள செயல்முறைகளில் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவு என்பதால் குறிப்பாக நோயாளியின் ஒவ்வாமை போன்ற விவரங்கள் மேம்படுத்தப்படவேண்டும் என்பதை சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் மகாதீர் அப்துல் வஹாப் தெரிவித்தார்.
“மருந்துகளின் விவரங்கள் அடங்கிய விளக்கச் சீட்டில் நோயாளியின் முழு தகவல்களும் மருந்தின் செயல்பாடு பற்றிய குறிப்புகளும் தெளிவாக இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும்,” என்று அவர் விளக்கினார்.
சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பு, மருந்து வழங்கலில் ஏற்படும் பிழைகளைக் குறைக்கவும் நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்படும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், கையால் எழுதியும் வழங்கப்படும் இருவகையான மருந்துகளுக்கான விளக்கச் சீட்டுகளுக்கும் இந்தப் புதிய பரிந்துரை பொருந்தும்.
தற்போதைய முறைப்படி நோயாளின் அடிப்படை விவரம், அடையாள அட்டை எண், வயது, அன்றைய தேதி, நோய் பற்றிய குறிப்புகள் மட்டுமே இடம்பெறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
புதிய விதிமுறைப்படி, நோயாளியின் முழுப் பெயர், வயது, அடையாள அட்டை எண், எடை, பாலினம், தொடர்பு எண்கள், மருத்துவ சோதனைக்குப் பின் அடையாளம் காணப்பட்ட நோய், ஒவ்வாமை, குடியுரிமைத் தகுதி, ஆகியவற்றுடன் கூடுதலாக மருத்துவத் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும்.
அதன்படி, மருந்து வழங்கும் முறை, மருந்தின் வடிவம், பெயர், அளவு, உட்கொள்ளும் இடைவெளி, காலவரையறை, மருந்தின் எண்ணிக்கை போன்ற அதிக தகவல்கள் இணைக்கப்படவேண்டும்.

