ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ANA) விமான நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் காணப்பட்ட ஒரு சிறு தவற்றால் 333,000 வெள்ளி மதிப்புள்ள விமான பயணச் சீட்டுகளை 22,000 வெள்ளிக்கு வாங்கியுள்ளார் ஒரு கில்லாடி.
ஹெர்மன் யிப் என்ற அந்த 32 வயது மனிதர் இணையப்பக்கத்தில் நாணயச் செலாவணி தொடர்பில் காணப்பட்ட சிறு தவற்றைச் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.
ஜகார்தாவுக்கும் அருபாவுக்கும் இடையிலான முழுப் பயணத்திற்காக ஹெர்மன் 25 பயணச்சீட்டுகள் வாங்கியுள்ளார். அவை அனைத்தும் 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகள்.
இணையப்பக்கத்தில் இருந்த தவற்றை ஒரு சிலரே கண்டுபிடித்தனர். தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தவறவிட மனமில்லாததால் பயணச்சீட்டுகளை வாங்கியதாக ஹெர்மன் கூறினார்.
வியட்னாமுக்கான தங்களின் இணையத்தளத்தில் நேர்ந்த தவற்றைத் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதென 'ஏஎன்ஏ' விமானச் சேவையை வழங்கும் 'ஏஎன்ஏ ஹோல்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.
தவறு நேர்ந்ததற்கான காரணத்தை அறியும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
குறைந்த விலைக்கு 'பிஸ்னஸ் கிளாஸ்' பயணச்சீட்டுகளை வாங்கியோரால் அவற்றைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து இம்மாத இறுதியில் முடிவெடுக்கப்படும் என்று 'ஏஎன்ஏ'யின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அதற்கு முன்பு பயணம் செய்வோரால் அப்பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தமுடியும்.