வாஷிங்டன்: ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவ்வாறு நடந்ததும் இவ்வார இறுதியில் இருநாடுகளும் சந்திக்க வாய்ப்புள்ளது என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நம்பிக்கை தெரிவித்தார்.
அதேசமயம், லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துடன் போராடும் ஹிஸ்புல்லா போராளிக் குழுவை அவர் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ஏனெனில் இஸ்ரேல், லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள 10 நாள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் வியாழக்கிழமை அமலுக்கு வந்தது.
அமெரிக்க, ஈரானிய அதிகாரிகளின் அடுத்த சந்திப்பு சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஏப்ரல் 18-19) நடத்தப்படலாம் என்பதோடு, இதுவரை மத்திய கிழக்கில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படலாம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அமைதி ஒப்பந்தத்துக்குத் தயாராக இருப்பதால் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் சண்டை நிறுத்தத்துக்கு அவசியம் ஏற்படாது என்பதையும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“என்ன நடக்கிறது என்று காத்திருப்போம். ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டால் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அந்த நிகழ்வைப் பார்வையிட நான் நேரடியாகச் செல்வேன்,” என்று வெள்ளை மாளிகைக்கு வெளியே இருந்த செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் நடந்துவரும் போர், அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உலக அளவில் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டுள்ளது. அனைத்துலக பண நிதியம், அதன் பொருளியல் கணிப்புகளை கீழ்முகமாக மாற்றியமைத்துள்ளது. அதோடு, இந்தப் போர் தொடர்ந்தால், உலகம் பொருளியல் மந்தநிலையின் விளிம்புக்குத் தள்ளப்படும் எனவும் நிதியம் எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு 60 நாள்களில் முழுமையான போர் நிறுத்தத்துக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்படும் என்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவரம் அறிந்த பாகிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

