கிங்ஸ்டன்: ‘மெலிசா’ சூறாவளி கரீபியன் தீவுகளைப் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக வடக்கு கரீபியன் பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.
சூறாவளியால் பல கட்டடங்கள் சேதமடைந்தன. குறைந்தது 30 பேர் மாண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது வியாழக்கிழமை (அக்டோபர் 30) இரவு பெர்முடாவை நோக்கி ‘மெலிசா’ சூறாவளி சென்றதாக அவ்வட்டார வானிலை ஆய்வு நிலையம் அறிக்கை வெளியிட்டது.
மெலிசா சூறாவளி மணிக்கு 169 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
சூறாவளி காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அவ்வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் படகுச் சேவைகள் அனைத்தும் நிறத்துப்பட்டுள்ளன. சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டன.
பஹாமாஸில் சூறாவளி ஓய்ந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் சில நாள்களுக்கு வீடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெலிசா சூறாவளி ஹய்ட்டியை நேரடியாகப் பாதிக்கவில்லை, இருப்பினும் அங்குப் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. அதில் குறைந்தது 25 பேர் மாண்டனர்.
தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த ஓர் ஆற்றில் மோசமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் அங்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

