பெட்டாலிங் ஜயா: அதிக லாபத்தை ஈட்டித் தரும் திட்டம் என்றெண்ணி, ஆடவர் ஒருவர் பின்னர் மலேசிய ரிங்கிட் 224,000ஐ (S$69,780) இழந்துவிட்டார்.
வாட்ஸ்ஆப் மூலம் வந்த ஒரு விளம்பரத்தை 2022ஆம் ஆண்டில் பார்த்த அந்த 57 வயது ஆடவர், அதற்குப் பதில் அனுப்பினார்.
தொடக்கத்தில் தலா 11,000 மலேசிய ரிங்கிட் மதிப்பில் மூன்று உறைவிப்பான்களை (freezers) வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஈராண்டுக்குள் அவற்றால் பேரளவில் தரகுப் பணத்தைச் சம்பாதிக்க முடியும் என்ற உறுதியும் ஆடவருக்கு அளிக்கப்பட்டது.
அதையடுத்து சொன்னவாறு அவருக்கு மலேசிய ரிங்கிட் 85,600 தரகுப் பணமும் வந்து சேர்ந்தது.
பின்னர், ஆடவர் தமது சேமிப்புப் பணம் அனைத்தையும் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார்.
மொத்தம் 28 உறைவிப்பான்கள் மீது முதலீடு செய்த பின்னர், கிடைக்க வேண்டிய 22,400 ரிங்கிட் தரகுப் பணம் அவரின் கைக்கு வரவில்லை.
அப்போதுதான், மோசடிக்குத் தாம் ஆளாகியுள்ளதை ஆடவர் உணர்ந்தார். அதையடுத்து காவல்துறையினர் புகார் அளித்தார்.
வேறொரு சம்பவத்தில் இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டம் குறித்த விளம்பரத்தை ஃபேஸ்புக் தளத்தில் பார்த்த 73 வயது ஆடவர், அதில் தம் பணத்தை முதலீடு செய்து 108,000 ரிங்கிட்டை இழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக் கும்பல் சொன்னபடி ஆகஸ்ட் மாதம் முதல் அந்த முதியவர் நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பியுள்ளார் என்று காவல்துறையினர் கூறினர்.
முதியவர் தமது லாபத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன் 60,000 ரிங்கிட்டை வரியாகச் செலுத்த வேண்டும் என்று அவரிடம் கூடுதல் பணம் கோரப்பட்டபோது, தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்தார். உடனே, காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

