தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்க்டிக் விலங்குகளின் உடலில் பாதரச அளவு உயர்வு: ஆய்வு

2 mins read
740761a0-fdd6-482e-b94d-4cb72ddb8232
முந்தைய ஆய்வுகளில் பெருங்கடல்களில் பாதரசத்தின் அளவு 300 ஆண்டுகளுக்கு மேலாக அதே நிலையில் இருக்குமென்று கூறப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஆர்க்டிக் வட்டார விலங்குகளின் உடலில் பாதரசத்தின் அளவு தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகள் பாதரச வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தாலும் இத்தகைய நிலை ஏற்படக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

கிரீன்லாந்து முழுவதுமிருந்து சேகரிக்கப்பட்ட மீன்கள், பாலூட்டிகள், மண்ணின் மேற்புறம் படிந்துள்ள மக்கிப்போன தாவரப் பொருள்கள் ஆகியவற்றின் 700 மாதிரிகளை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர்.

கடந்த 40 ஆண்டுகளாக அந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கடலலைகள் மூலம் அவற்றில் பாதரசம் சேர்ந்ததை ஆதாரங்கள் காட்டுவதாகக் கூறப்பட்டது.

‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ சஞ்சிகையில் இந்த வாரம் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆர்க்டிக் வட்டாரத்தில் பாதரச மாசு ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதை அந்த ஆய்வு விளக்குகிறது.

தொடர்ந்து அதிக அளவிலான பாதரசம் உள்ள சூழலுக்கு உட்படும்போது நரம்பியல் கோளாறுகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

தற்போதைய பாதரச வெளியேற்ற நிலை தொடர்ந்தால், சில நூற்றாண்டுகளுக்கு ஆர்க்டிக் வட்டாரத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அது பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்று அண்மைய ஆய்வு கூறுகிறது.

கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள கடலலைகளின் அமைப்புமுறையையும் பாதரச மாசு பரவும் விதத்தையும் தொடர்புபடுத்தி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.

முந்தைய ஆய்வுகளில் பெருங்கடல்களில் பாதரசத்தின் அளவு 300 ஆண்டுகளுக்கு மேலாக அதே நிலையில் இருக்குமென்று கூறப்பட்டது.

நிலக்கரியை எரித்தல், தங்கம் போன்ற தாதுப்பொருள்களை எடுப்பதற்கான சுரங்க நடவடிக்கைகள் போன்றவற்றால் பாதரசம் சுற்றுச்சூழலில் கலக்கிறது.

2023ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 1500களுடன் ஒப்பிடுகையில் தற்போது காற்றில் பாதரசத்தின் அளவு கிட்டத்தட்ட ஏழு மடங்காகியிருப்பதாகக் கூறப்பட்டது.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 1970களுக்குப் பிறகு பாதரச வெளியேற்றம் குறையத் தொடங்கியது.

மினமாட்டா மாநாட்டில் இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாதரச மாசு அதிகம் கண்டறியப்பட்ட இந்தியா, சீனா போன்ற நாடுகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே பாதரச வெளியேற்றக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கிவிட்டன.

வரும் நவம்பர் மாதம் மினமாட்டா மாநாட்டின் ஆறாவது முக்கியக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட 120க்கு மேற்பட்ட நாடுகள், பாதரசப் பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்குவதற்கு இந்த ஆண்டு (2025) முதலாம் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

பாதரச வெளியேற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டாலும் ஆர்க்டிக் வட்டாரம் மீட்சிகாண்பதற்குச் சில நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்