டென்வர்: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தாய்நிறுவனமான மெட்டா, மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகப் பல நூறு வேலைகளைக் குறைக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் உள்ள மெட்டா ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று அதுபற்றித் தகவலறிந்த ஒருவர் தெரிவித்ததாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்படும் ஊழியர்களில் சிலர்க்கு வேறு வேலை வழங்கப்படலாம் அல்லது வேறு இடத்திற்கு மாறும்படி கேட்டுக்கொள்ளப்படலாம் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, மெட்டாவின் ‘ரியாலிட்டி லேப்ஸ்’ பிரிவைச் சேர்ந்த சிலர் புதன்கிழமை (மார்ச் 25) வரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
“இலக்குகளை எட்டுவதற்கேற்ற நன்னிலையில் இருப்பதை உறுதிசெய்ய, மெட்டாவிலுள்ள பல்வேறு பிரிவுகளும் அவ்வப்போது மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன,” என்று மெட்டா நிறுவனப் பேச்சாளர் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.
“முடிந்தவரையிலும் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வேறு வாய்ப்புகளைக் தேடிவருகிறோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்குறைப்பால் ஆயிரத்திற்கும் குறைவான ஊழியர்களே பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மெட்டா நிறுவனத்தில் ஏறக்குறைய 79,000 பேர் பணியாற்றி வந்தனர்.

