‘சார்ம்’ செயற்கை நுண்ணறிவுச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா

‘சார்ம்’ செயற்கை நுண்ணறிவுச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா

படம்: ராய்ட்டர்ஸ்

24 Sep 2026 - 8:05 pm

2 mins read

மென்லோ பார்க், கலிஃபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் ‘மெட்டா சார்ம்’ (Meta Charm) என்ற சிறிய கையடக்கச் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் மூலம், அதன் வெற்றிகரமான அறிவார்ந்த கண்ணாடிகளையும் தாண்டி நிறுவனத்தின் வன்பொருள் முயற்சி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஏர்பாட்ஸ் பெட்டியின் அளவில் உள்ள அந்த ஏஐ சாதனம், ஏறத்தாழ 5 சென்டிமீட்டர் தொடுதிரையையும் ‘5ஜி’ இணைப்பு வசதியையும் கொண்டுள்ளது.

டிசம்பர் மாத விடுமுறைக் கால விற்பனைக்கு ‘சார்ம்’ தயாராகிவிடும் என்று மெட்டா கூறியுள்ளது. இருப்பினும், அதன் விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

“சாவிக்கொத்தில் பொருத்தக்கூடிய, எப்போதும் பேசுவதற்குக் கிடைக்கக்கூடிய ஒரு சிறிய சாதனத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,” என்று கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க்கில் நடைபெற்ற மெட்டாவின் வருடாந்தர நிகழ்வான ‘மெட்டா கனெக்ட்’ல் ஸக்கர்பெர்க் கூறினார்.

அறிவார்ந்த கண்ணாடிகள் முதல் கையடக்கச் சாதனங்கள் வரை, பயனீட்டாளர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறையைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாற்றியமைக்கும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. இருப்பினும், அவற்றில் எந்த வடிவமைப்பு பொதுமக்களிடம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மெட்டா நிறுவனம் அதன் ஏஐ கண்ணாடிகள் மூலம் அந்த முயற்சியைத் தொடங்கியது. ‘எஸிலோர்லக்ஸோட்டிகா ரே-பேன்’ (EssilorLuxottica Ray-Ban) பங்காளித்துவத்தின் மூலம், அப்பிரிவில் தனது முதல் வெற்றிகளில் ஒன்றை அது பதிவு செய்தது.

அந்தச் சமூக ஊடக நிறுவனம், கண்ணாடிகளைப் போல் தோற்றமளிக்கும் அதன் முதல் மெய்நிகர் உண்மை நிலை சாதனத்தையும் செப்டம்பர் 23ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.

அத்துடன், மக்களின் அனுமதியின்றி காணொளிகளையும் புகைப்படங்களையும் எடுக்கும் ஏஐ சாதனங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தனியுரிமை எதிர்ப்பைக் குறைக்கும் வகையில், கேமரா இல்லாத அறிவார்ந்த கண்ணாடிகளையும் அது காட்சிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்
மெட்டாஏஐஅமெரிக்கா