சான்பிரான்சிஸ்கோ: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற பல சமூக ஊடகத் தளங்களையும் செயலிகளையும் நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் உலக அளவில் ஏறத்தாழ 8,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோருக்குப் புதன்கிழமை (மே 20) காலை 4 மணியளவில் அதற்கான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன என்று அமெரிக்காவின் ‘தி நியுயார்க் டைம்ஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டது.
எத்தனை சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் தெரியவில்லை.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் மெட்டா அதிக முதலீடு செய்துவருவதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஊழியர்களுக்கும் அதே நாளில் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது பணியில் உள்ள மெட்டா ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. குறிப்பாகப் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாண்டில் மேலும் ஊழியர்கள் இதுபோன்று பணிநீக்கம் செய்யப்படுவர் என்று அந்நிறுவனம் குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
உலக அளவில் 80,000 ஊழியர்கள்
கடைசியாகத் திங்கட்கிழமை (மே 18) மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 7,000 ஊழியர்கள் புதிய செயற்கை நுண்ணறிவுப் பிரிவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. இவ்வாண்டு மார்ச் மாதம் வரையில் அந்நிறுவனத்தில் 80,000 ஊழியர்கள் பல்வேறு நாடுகளில் பணியில் இருந்தனர்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் மட்டும் 2026ஆம் ஆண்டில், மெட்டா நிறுவனம் S$128 பில்லியன் முதலீடு செய்ய உறுதிகூறியுள்ளது.

