23,000 வேலைகளைப் பாதிக்கும் ஆட்குறைப்பில் மெட்டா, மைக்ரோசாஃப்ட்

23,000 வேலைகளைப் பாதிக்கும் ஆட்குறைப்பில் மெட்டா, மைக்ரோசாஃப்ட்

1 mins read
95d627c7-27c6-4b67-b440-ec73addf0e88
செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புக்கு ஆகும் பல பில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. - படங்கள்: ஏஎஃப்பி, நியூயார்க் டைம்ஸ்

சான்ஃபிரான்சிஸ்கோ: உலகின் இருபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டாவும் மைக்ரோசாஃப்டும் ஏறத்தாழ 23,000 வேலைகளைப் பாதிக்கக்கூடிய ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் செலவிடப்படும் பெருந்தொகைகளை ஈடுகட்டவும் செயல்பாடுகளைச் சீரமைக்கவும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவை முடிவுசெய்துள்ளன.

இது தொடர்பாக வியாழக்கிழமை (ஏப்ரல் 23) மெட்டா நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தனது ஊழியரணியில் பத்து விழுக்காட்டை, அதாவது ஏறத்தாழ 8,000 பேரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்த நடவடிக்கை மே 20ஆம் தேதி தொடங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது காலியாக உள்ள 6,000 வேலைகளை நிரப்பப்போவதில்லை என்றும் அது கூறியுள்ளது.

முன்னதாக, மைக்ரோசாஃப்ட் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்ள தனது ஊழியர்கள் தாமாக முன்வந்து வேலையிலிருந்து விலகும் திட்டம் தொடர்பான அறிவிப்பு அது.

அதன் அமெரிக்க ஊழியரணியில் கிட்டத்தட்ட ஏழு விழுக்காட்டினர் அந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுவதாக அது பற்றி அறிந்த ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

மைக்ரோசாஃப்ட் இதற்கு முன் இந்த அளவுக்கு அதிகமானோரை ஆட்குறைப்பு செய்ததில்லை என்றும் தெரிவித்தார், தமது பெயரை வெளியிட விரும்பாத அவர்.

2025 ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 125,000. வெளியான தகவலின் அடிப்படையில், தாமாக முன்வந்து வேலையிலிருந்து விலகும் திட்டத்திற்குக் கிட்டத்தட்ட 8,750 பேர் தகுதிபெறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்