கட்டண முறைக்கு அடியெடுத்து வைக்கும் மெட்டா

கட்டண முறைக்கு அடியெடுத்து வைக்கும் மெட்டா

2 mins read
11fb72cd-de71-4a98-9f9a-7220474d2d35
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகிய மூன்று முதன்மைத் தளங்களிலும் மாதத்துக்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர் வரையிலான பிரிமியம் சந்தா திட்டங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

சான் ஃபிரான்சிஸ்கோ: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஈடுகட்டும் நோக்கில், மெட்டா பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனம் தனது சமூக ஊடக செயலிகள் மற்றும் ஏஐ சாட்பாட்டுக்குப் பிரிமியம் கட்டணச் சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதன்கிழமையன்று (மே 27) இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகிய மூன்று முதன்மைத் தளங்களிலும் மாதத்துக்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர் வரையிலான பிரிமியம் சந்தா திட்டங்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ், ‘இன்ஸ்டகிராம் பிளஸ்’ , ‘ஃபேஸ்புக் பிளஸ்’ ஆகிய சேவைகளுக்கு மாதத்துக்கு 3.99 அமெரிக்க டாலரும் ‘வாட்ஸ்அப் பிளஸ்’ சேவைக்கு மாதத்துக்கு 2.99 அமெரிக்க டாலரும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ‘பிளஸ்’ சேவைகள் மூலம் கூடுதல் பகுப்பாய்வுகள், ஸ்டோரி ரீவாட்ச் புள்ளிவிவரங்கள், பரந்த அளவிலான வாசகர் சென்றடைவு மற்றும் பிரிமியம் ‘ஸ்டிக்கர்கள்’, பிரத்தியேக ‘ரிங்டோன்’கள் போன்ற மேம்பட்ட அம்சங்களைப் பயனர்கள் பெற முடியும்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் முதல் ‘மெட்டா ஏஐ’ சாட்பாட்டுக்கான கட்டணச் சேவையையும் மெட்டா நிறுவனம் சோதனை செய்யவுள்ளது. முதற்கட்டமாகச் சிங்கப்பூர், குவாட்டமலா, பொலிவியா ஆகிய நாடுகளில் தொடங்கப்படும் இந்த ஏஐ சந்தா திட்டம் இரண்டு நிலைகளில் வெளிவரவுள்ளது.

படங்கள் மற்றும் காணொளிகளைத் தயாரிப்பதற்கும் விரிவான ஆய்வுத் தேவைகளுக்கும் பயன்படும் ‘மெட்டா ஒன் பிளஸ்’ என்ற அடிப்படைத் திட்டம் மாதத்துக்கு 7.99 அமெரிக்க டாலர் (S$10.21) விலையிலும் அதைவிடக் கூடுதல் பயன்பாட்டு வரம்பைக் கொண்ட ‘மெட்டா ஒன் பிரிமியம்’ திட்டம் மாதத்துக்கு 19.99 அமெரிக்க டாலர் விலையிலும் கிடைக்கவுள்ளன.

வழக்கமான ‘மெட்டா ஏஐ’ சாட்பாட்டைப் பயனர்கள் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்றாலும், தொடர் பயன்பாட்டுக்குப் பிறகு, அதற்கான வரம்பு முடிவுக்கு வரும் என்று மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போது மெட்டா நிறுவனத்தின் மொத்த வருவாயில் சந்தா கட்டணங்கள் மிகச் சிறிய பங்கையே வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
மெட்டாகட்டணம்செயற்கை நுண்ணறிவு