வாஷிங்டன்: மெக்சிகோ மாடுகளில் சதை உண்ணும் புழுவான ‘நியூ வேர்ல்ட் ஸ்குரூவேர்ம்’ இருப்பது பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்து மாடு இறக்குமதி நிறுத்தப்படும் என்று அமெரிக்க வேளாண் துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் புதன்கிழமை (ஜூலை 9) அறிவித்துள்ளார்.
‘ஸ்குரூவேர்ம் ஈ’ பரவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மே 11ஆம் தேதி உயிருள்ள மாடுகள், குதிரைகள், காட்டெருமைகளின் தெற்கு எல்லை வழியான இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்தார். ‘ஸ்குரூவேர்ம் ஈ’யின் சதைகளை உண்ணும் முட்டைப்புழுக்கள் கால்நடைகளைக் கொல்லக்கூடியவை.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து மெக்சிகோவின் பேச்சுவார்த்தைகளால் கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர், ஜூலை 7ஆம் தேதி அமெரிக்காவுக்கான கால்நடை ஏற்றுமதியை மெக்சிக்கோ மீண்டும் தொடங்கியது.
உயிர்கொல்லும் பூச்சியைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து கால்நடை ஏற்றுமதி மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.
“குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் நடவடிக்கை அவசியம்,” என்று ஜூலை 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திருவாட்டி ரோலின்ஸ் கூறினார்.
அதிகாரபூர்வ மதிப்பீடுகளின்படி, 2024ல் மெக்சிக்கோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது.