கோலாலம்பூர்: ஆலயங்கள் மீதான ஒரு சில அண்மைய அறிவிப்புகள் மற்றும் ஜம்ரி வினோத் போன்ற பொறுப்பற்றவர்களின் குறைகூறல்கள் அனைத்தும் மலேசிய இந்துக்களுக்கு அச்சுறுத்தலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இதைத் கருத்தில்கொண்டு, மலேசிய இந்திய காங்கிரசும் (மஇகா) மலேசிய இந்துச் சங்கமும் இணைந்து நாடு தழுவிய அளவில் ஆலயங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் ஒருங்கிணைந்து செயல்படவிருக்கின்றன. ஒவ்வொரு மாநில மஇகா அலுவலகமும் இதற்கான செயலகமாகச் செயல்படும் என்று மலேசிய இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் எம். சரவணன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தெரிவித்துள்ளார்.
“இந்துச் சங்கத்தோடு இணைந்து அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் ஆலயப் பிரச்சினைகள், நிலப் பிரச்சினைகள்; அதற்கு என்ன மாதிரியான தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் வழங்க முடியும் என்பதை இரு அமைப்புகளும் ஆலோசிக்கும்.
“அதே நேரத்தில் அந்தந்த மாநில அரசிடம் என்ன மாதிரியான வேண்டுகோளையும், தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஆராய்வதற்கும் அந்தந்த மாநிலங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
“இதற்கு மஇகாவின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் மலேசிய இந்துச் சங்கத்தின் தேசியத் தலைவர் தங்கபூஷனும் ஒருமித்த கருத்தோடு இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளித்துள்ளார்கள்.
“மலேசிய இந்துக்கள் அனைவரும் இந்தச் சூழலை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மாநில மஇகா பொறுப்பாளர்களும், இந்துச் சங்கப் பொறுப்பாளர்களும் உடனடியாக இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்,” என்று திரு சரவணன் கேட்டுக்கொண்டார்.

