கோலாலம்பூர்: மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தனது 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், கல்விக்கு அப்பால் தனது கவனத்தை விரிவுபடுத்தி, இந்திய சமூகத்தினரிடையே தொழில்முனைவோரையும் பெருநிறுவனத் தலைவர்களையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்று மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் தெரிவித்துள்ளார். இணையத்தளங்கள் உட்பட, இந்தியச் சமூகம் தற்போது வர்த்தகத்தில் ஈடுபடுவதில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் இது இல்லத்தரசிகளுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். "கல்வித் துறையில் மஇகாவின் போராட்டம் பலனளித்துள்ளது. இப்போது நாங்கள் வர்த்தகத் துறையில் கவனம் செலுத்துகிறோம். இந்தியச் சமூகத்தினரிடமிருந்து பெருநிறுவன ஆளுமைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்துகிறோம்," என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
முன்னதாக, நாடு தழுவிய அளவில் 137 கட்சிப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் நடைபெற்ற, மஇகாவின் 80வது ஆண்டு விழாவையொட்டி தாமன் தாசிக் தித்திவாங்சாவில் நடத்தப்பட்ட இந்து கி.மீ. ஓட்டப் பந்தயத்தில் 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அவரைப் பொறுத்தவரை, கல்வியால் இந்திய சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைத்து, தரமான மனித மூலதனத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், 1946 ஆகஸ்ட் மாதம் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து மஇகாவின் போராட்டத்திற்குக் கல்வியே அடித்தளமாக இருந்து வருகிறது. "கல்வியால் மட்டுமே இந்தியச் சமூகத்தின் தலைவிதியை மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று ஏறக்குறைய ஒவ்வொரு குடும்பமும் பட்டதாரிகளையும் தொழில் நிபுணர்களையும் உருவாக்கியுள்ளது. "மேலும், ஓர் அரசியல் கட்சியாக மஇகா, இன்றுவரை மலேசியர்களுக்கு கல்விக்கான நிதி உதவியாக கிட்டத்தட்ட 227 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளது," என்று அவர் கூறினார்.
மஇகா தொடர்ந்து பொருத்தமானதாக இருப்பதையும், இளைய தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பதையும் உறுதிசெய்ய, ஓட்டப் பந்தய நிகழ்வுகள், கலந்துரையாடல் அமர்வுகள், கலாசார, சமய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அடித்தளத் திட்டங்கள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

