கோலாலம்பூர்: மலேசியாவெங்கும் இயங்கும் பகடிவதைத் தடுப்பு அவசரத் தொடர்பு எண்ணை மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைய தலைமுறையினரிடையே பகடிவதை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அப்பிரச்சினையை எதிர்கொள்ளவும் அக்கட்சி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பகடிவதைத் தடுப்பு அவசரத் தொடர்பு எண்ணை மஇகா துணைத் தலைவரும் தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் அறிமுகப்படுத்தினார். மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
பகடிவதையால் பாதிக்கப்படுவோர் புதிய அவசரத் தொடர்பு எண் மூலம் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, பகடிவதையால் பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரம் அறிந்தோர் அவசரத் தொடர்பு எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம். பகடிவதைக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அரசாங்கம் சூளுரைத்துள்ளது.