உறைந்த ஏரியில் விழுந்த அதன் உரிமையாளரைக் காப்பாற்ற உதவிய நாய்

உறைந்த ஏரியில் விழுந்த அதன் உரிமையாளரைக் காப்பாற்ற உதவிய நாய்

2 mins read
d18e65e0-6c9b-477b-9692-ddd8179a967e
உறைந்த ஏரி ஒன்றிலிருந்து 65 வயது ஆடவர் ஒருவரை, அந்த ஆடவரின் நாயுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்து செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

மிச்சிகன்: அமெரிக்காவில் உறைந்த ஏரி ஒன்றிலிருந்து 65 வயது ஆடவர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரின் நாயுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்து செயல்பட்டு அவரை ஏரியிலிருந்து மீட்டதாக மிச்சிகன் காவல்துறையினர் கூறினர்.

மீட்பு நடவடிக்கை காலை 11.45 மணிவாக்கில் நடைபெற்றதாக காவல்துறை, அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

‘ஈச்ட் பே டவுன்ஷிப்’ எனும் பகுதியில் உள்ள ‘ஆர்புடுஸ்’ ஏரியில் விழுந்த மிச்சிகன் ஆடவர் ஒருவரிடமிருந்து உதவிக்கு அழைப்பு வந்ததாக அதிகாரி கேமரோன் பென்னட்ஸ் கூறினார்.

பனிக்கட்டிகளினால் அதிகாரி பென்னட்சால் அந்த ஆடவரை எட்ட முடியவில்லை. அவர் ‘ரூபி’ என்ற அந்த ஆடவரின் நாயை உதவிக்கு அழைத்தார்.

அந்த அதிகாரி ரூபியின் கழுத்துப் பட்டையில் ஆரஞ்சு நிற மீட்புத் தகடு ஒன்றுடன் மஞ்சள் நிறக் கயிற்றைக் கட்டுவதை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான காணொளியில் காணமுடிந்தது.

பிறகு அவர் கயிற்றைப் பிடித்துக்கொண்டே, அந்த ஆடவரிடம் அவரது நாயை அழைக்கும்படி கூறினார்.

அதனைத் தொடர்ந்து ரூபி அந்த மீட்புத் தகட்டுடன் அதன் உரிமையாளரை நோக்கி ஓடியது.

ஏரியில் சிக்கியிருந்த அந்த ஆடவர் மீட்புத் தகட்டைப் பிடித்தவுடன், தமது கால்களை உதைத்து மேற்பரப்புக்கு வரும்படி அதிகாரி அவரைக் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் அதிகாரி கயிற்றையும் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார்.

ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 16 நிமிடங்கள் தண்ணீரில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

‘மன்சன்’ மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பினார்.

குறிப்புச் சொற்கள்