வாஷிங்டன்: திறன்மிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாதிரிகளைச் சாத்தியமான அச்சுறுத்தல்களாகக் கருத வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய ஏஐ மாதிரிகள் வழிதவறிச் செயல்படுவதைத் தடுக்க உடனடியாக ‘அவசரகாலத் தடை’ அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏஐ மாதிரிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் உறுதிமொழிகளை மட்டும் பயனீட்டாளர்களும் நிறுவனங்களும் முழுமையாக நம்பியிருக்கக்கூடாது என்று திரு நாதெல்லா அறிவுறுத்தியுள்ளார்.
ஓர் ஏஐ மாதிரி பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனக் கருதி, அதைத் தொடக்கத்திலிருந்தே கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் பணிக்கு நடுவே அனுமதிக்கப்பட்ட ஒருவரால் அதனை இடைநிறுத்தவோ முழுமையாக முடக்கவோ முடிய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் சனிக்கிழமை (அக்டோபர் 10) எக்ஸ் ஊடகம் வழியாக அறிக்கை ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
ஆந்த்ரோபிக், ஓப்பன்ஏஐ நிறுவனங்களின் ஏஐ மாதிரிகள் அண்மைய மாதங்களில் முறையின்றிச் செயல்பட்டது தெரியவந்ததை அடுத்து, அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு அபாயங்கள் குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 14ஆம் தேதியன்று மைக்ரோசாஃப்ட் தனது அதிநவீன ஏஐ மாதிரிகளின் உருவாக்கத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
ஏஐ மாதிரிகளைத் தனிமனிதர்போல் கருதுவதற்குச் சட்டபூர்வ தகுதியோ உரிமைகளோ வழங்கப்படக் கூடாது என்றும் அவை மனிதக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கவோ பயனர்களை ஏமாற்றவோ கூடாது என்றும் அந்த நெறிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
முக்கிய முடிவுகளுக்கு ஒரே ஏஐ மாதிரியை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் ஏஐ செயல்பாடுகளைக் கட்டுப்பாடற்ற தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் திரு நாதெல்லா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஏஐ அமைப்பில் ஏற்படும் பெருந்தோல்விகளையும் பாதுகாப்பு விதிமீறல்களையும் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, ஏஐ நிறுவனங்கள் பாதுகாப்புத் தொடர்பான சம்பவங்கள் குறித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டு, அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் ஏற்படுத்திய ஏஐ பணிக்குழு வலியுறுத்தியுள்ளது. அவற்றைச் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அக்குழு எச்சரித்துள்ளது.
