11,000 பேரைப் பணிநீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் முடிவு

11,000 பேரைப் பணிநீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் முடிவு

1 mins read
4e6f7c0c-34b8-4bcb-b5f4-1682264476ca
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற நடவடிக்கைகளைவிட இப்போதைய நடவடிக்கை சற்று பெரிய அளவில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

பெங்களூரு: முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 11,000 வேலைகளைக் குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நிறுவனம், மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் சில பணியிடங்களை நீக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு தொடரும் என்பதைக் கோடிகாட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமேசான், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருந்தன.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியரணியில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டை, அதாவது 11,000 ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது என்று ஸ்கை நியூஸ் செய்தி தெரிவிக்கிறது.

மைக்ரோசாஃப்ட்டின் இப்போதைய ஆட்குறைப்பு நடவடிக்கை, கடந்த ஆண்டில் இடம்பெற்றதைவிட சற்று பெரிய அளவில் இருக்கும் என்று புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுகிறது.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்துக் கருத்துரைக்க மைக்ரோசாஃப்ட் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவில் 122,000 பேர், மற்ற நாடுகளில் 99,000 பேர் என அந்நிறுவனத்தில் 221,000 பேர் வேலைசெய்வதாகக் கூறப்படுகிறது.