ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறைக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிடுவதாகத் தகவல்

ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறைக்க மைக்ரோசாஃப்ட் திட்டமிடுவதாகத் தகவல்

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Jul 2026 - 3:24 pm

1 mins read

வாஷிங்டன்: உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியரணியில் கிட்டத்தட்ட 2.5 விழுக்காட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பு அடுத்த வாரத் தொடக்கத்திலேயே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக ‘பிஸ்னஸ் இன்சைடர்’ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது..

செலவுகளைக் கட்டுப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்புகளில் பெருமுதலீடு செய்யவும் ஏதுவாக அமெரிக்கத் தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் நிதித் துறை நிறுவனங்கள் அண்மைக் காலமாகத் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன.

அந்த வரிசையில், மைக்ரோசாஃப்ட்டின் இந்த நடவடிக்கை விற்பனை, ஆலோசனை, இணைய விளையாட்டு ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2025 ஜூன் 30 நிலவரப்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஏறக்குறைய 228,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

அதற்கு அடுத்த மாதத்தில், மைக்ரோசாஃப்ட் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவாக நான்கு விழுக்காடு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தொழில்நுட்பத் துறையிலுமே இந்த மந்தநிலை நீடிக்கிறது. மெட்டா நிறுவனம் இவ்வாண்டில் மட்டும் தனது ஊழியரணியில் 10 விழுக்காட்டைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அதுபோல, அமேசான் நிறுவனமும் உலகளவில் கிட்டத்தட்ட 16,000 வேலைவாய்ப்புகளை நீக்கத் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்