பேங்காக்: மத்திய கிழக்கு வட்டாரத்தால் முடங்கிய எரிசக்தி விநியோகம் உலக அளவில் வேளாண் துறையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள விவசாயிகள் வேளாண்மைக்குத் தேவையான முக்கிய இயந்திரங்களைக் குறைவான எரிசக்தி கிடைப்பது காரணமாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நெல் பயிரிடும் காலம் வரவிருக்கும் நிலையில் எரிபொருள் பற்றாக்குறையை விவசாயிகள் எதிர்கொண்டுள்ளனர்.
பங்ளாதேஷில், நெல்லுக்கு நீர் பாய்ச்சும் இயந்திரங்களுக்கான டீசலை விவசாயிகளால் பெற முடியவில்லை.
பிலிப்பீன்சில் மீனவர்கள் படகுகளைக் கரையில் நிறுத்திவிடும் நிலைக்கு விரைவில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் முடக்கத்தால் உணவு விலைகளும் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கோடைக்கால நடுப்பகுதிக்குள் எரிபொருள் தீர்ந்துவிடக்கூடும் என்ற பிரிட்டிஷ் விவசாயி ஒருவர், எரிபொருளை வாங்குவதற்காகும் செலவைக் கொடுத்தாகவேண்டிய சூழல் நிலவலாம் என்றார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, உரம் ஆகியவற்றின் விநியோகம் நிலைகுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பயிர்களுக்கான உரத்தை வாங்க ஏற்கெனவே விவசாயிகள் அதிக விலை கொடுக்கின்றனர். வேறு சிலருக்கு முக்கிய ஏற்றுமதிச் சந்தையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணெய்த் தட்டுப்பாடு சூழலை மேலும் இக்கட்டாக்கியுள்ளது.
நவீன வேளாண் முறை எரிசக்தியை அதிகம் சார்ந்திருக்கும் துறை. விதைக்கவும் அறுவடை செய்யவும் இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, எரிபொருள் இல்லாமல் விவசாயிகள் தலைமுறைகளாகப் பின்பற்றி வரும் வேளாண் முறைகள் நிலைகுலையக்கூடும்.
போதுமான டீசல் கிடைக்காவிட்டால் விவசாயிகளின் விதைப்பு தாமதமாகலாம் அல்லது குறையலாம். அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்களும் வாடிப்போகலாம்.
அறுவடைக்கும் அதைக் கொண்டு செல்வதற்குமான செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.

