மத்திய கிழக்குப் பூசல்: ரத்துசெய்யப்படும் விளையாட்டுப் போட்டிகள்

மத்திய கிழக்குப் பூசல்: ரத்துசெய்யப்படும் விளையாட்டுப் போட்டிகள்

1 mins read
e7ab8c18-9eab-49c3-b740-971d20e92548
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவிருந்த சீருடற்பயிற்சி உலகக் கிண்ணப் போட்டிகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இபிஏ

தோஹா: மத்திய கிழக்கில் தொடரும் பூசலால் அவ்வட்டார நாடுகளில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து ரத்துசெய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறவிருந்த சீருடற்பயிற்சி உலகக் கிண்ணப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அந்த விளையாட்டை நிர்வகிக்கும் ‘வோர்ல்டு ஜிம்னாஸ்டிக்ஸ்’ அமைப்பு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அறிக்கை மூலம் அறிவித்தது. அப்போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் 15லிருந்து 18ஆம் தேதிவரை நடைபெறவிருந்தன.

இவ்வாண்டின் சீருடற்பயிற்சி உலகக் கிண்ணப் போட்டிகள் வேறு தேதிக்கு மாற்றப்படாது என்றும் ‘வோர்ல்டு ஜிம்னாஸ்டிக்ஸ்’ தெரிவித்தது.

ஈரான் போர் காரணமாக பல விளையாட்டுப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. பஹ்ரேன், சவூதி அரேபியா ஆகியவற்றில் நடைபெறவிருந்த ஃபார்முலா ஒன் போட்டிகள் அவற்றில் அடங்கும். அவ்விரு போட்டிகளும் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெறவிருந்தன.

காற்பந்தைப் பொறுத்தவரை நடப்பு யூரோ கிண்ண வெற்றியாளரான ஸ்பெயினும் நடப்பு கோப்பா அமெரிக்கா வெற்றியாளரான அர்ஜென்டினாவும் மோதவிருந்த ஃபினாலிஸிமா ஆட்டமும் ரத்துசெய்யப்பட்டது. அந்த ஆட்டம் இம்மாதம் 27ஆம் தேதி கத்தாரில் நடைபெறவிருந்தது.

மற்றபடி கத்தாரில் ஏப்ரல் நடுப்பகுதியில் நடைபெறவிருந்த மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரி போட்டி வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்