மத்தியக் கிழக்கு மோதல் போக்கு வருந்தத்தக்கது: ஆசியான்

மத்தியக் கிழக்கு மோதல் போக்கு வருந்தத்தக்கது: ஆசியான்

2 mins read
2d5e7e81-16f0-43dd-8764-9d3df9696088
ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு சிற்றரசுகளில் ஏற்பட்ட வெடிப்பு. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மணிலா: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு முழுவதும் பதில் தாக்குதல்கள் தூண்டப்பட்டுள்ள நிலையில், மோதல் தீவிரமடைந்திருப்பது வருந்தத்தக்கது என ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிலையற்ற தன்மை குறித்த கவலைகளுக்கு மத்தியில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிப்ரவரி 28ஆம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்தப் புதிய பதற்றத்தைத் தூண்டிய நான்கு நாள்களுக்குப் பிறகு, புதன்கிழமையன்று (மார்ச் 4) இந்தக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய அரசாங்கங்கள் நிதானத்தையும் அரதந்திர அணுகுமுறையையும் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

“ஓமான் தலைமையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்னெடுக்கப்பட்ட அரசதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த மோதல் போக்கு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது,” என்று ஆசியான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதியன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பஹ்ரைன், ஜோர்தான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, சிரியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு எதிராக ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்னதாக, பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தடுப்பதற்கும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமான் பல வாரங்களாகச் சமரசம் செய்து வந்தது.

நெருக்கடியைத் தணிப்பதற்கான அரசதந்திர வாய்ப்புகள் இன்னும் உள்ளன என்று ஓமான் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 3) தெரிவித்தார். உடனடி போர்நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஆசியான் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைவது குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

இந்தத் தற்போதைய நிகழ்வுகள் பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கும், உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்மத்திய கிழக்குபோர்