ஈரான்மீது தாக்குதல்: எண்ணெய், எரிவாயு கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு

ஈரான்மீது தாக்குதல்: எண்ணெய், எரிவாயு கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு

2 mins read
aaae017a-0eeb-48fe-99b1-baffe8f0a7a7
ஹோர்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பிலும் கிட்டத்தட்ட 150 கப்பல்கள் நிலைகுத்தி நிற்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில், மத்திய கிழக்கிலிருந்து சீனாவுக்குப் பெரிய கப்பலில் எண்ணெய் ஏற்றிச் செல்லும் செலவு ஒரு நாளைக்கு 400,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை ஈரான் தாக்குவதை அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையேயுள்ள அந்த நீரிணை வழியாகவே உலகிற்கான ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய்யுடன் அதிக அளவிலான எரிவாயுவும் எடுத்துச்செல்லப்படுகின்றன.

சரக்குக் கட்டணங்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் TD3 என்ற தொழில்துறை அளவின்படி, மிகப் பெரிய கச்சா எண்ணெய்க்கப்பல்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட சரக்குக் கட்டணம், திங்கட்கிழமை (மார்ச் 2) நிலவரப்படி W419 ஆக, அல்லது ஒரு நாளைக்கு 423,736 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று எல்எஸ்இஜி (LSEG) தரவுகள் காட்டுகின்றன.

பழிவாங்கும் நடவடிக்கையாக, வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கியதால் மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய், எரிவாயு வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது என்றும், கடந்து செல்ல முயற்சி செய்யும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்றும் ஈரானிய புரட்சிக் காவல்படை தெரிவித்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எப்படியிருந்தாலும், பல கப்பல் நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதால் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்தை அளவிடுவது மிகவும் கடினம் என்று கப்பல் தரகர் ஒருவர் கூறினார்.

செவ்வாயன்று தொடங்கிய ஆசிய வணிகத்தில் எண்ணெய் விலைகள் நிலைப்படுத்தப்பட்டன. திங்களன்று 6.3 விழுக்காடு உயர்ந்ததைத் தொடர்ந்து, மேற்கு டெக்சஸ் இடைநிலை எண்ணெய் பீப்பாய்க்கு 71.23 அமெரிக்க டாலர் என மாற்றமின்றி இருந்தது.

குறிப்புச் சொற்கள்