மத்திய கிழக்கில் போர்: சிக்கிய 15,000 சொகுசுக் கப்பல் பயணிகள்

மத்திய கிழக்கில் போர்: சிக்கிய 15,000 சொகுசுக் கப்பல் பயணிகள்

2 mins read
65bad1d3-4262-4ee2-8f7d-c4a97a2fc04c
ஃபுஜைரா கடற்கரைக்கு அருகே உள்ள பகுதி. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மத்திய கிழக்கில் தொடரும் போரால் சொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட சுமார் 15,000 பேர் கடலில் சிக்கியுள்ளனர்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் (ஐநா) அனைத்துலக கடல்துறை அமைப்பு வியாழக்கிழமை (மார்ச் 5) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தது.

கிட்டத்தட்ட 20,000 கப்பல் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும் அனைத்துலகக் கடல்துறை அமைப்பு, சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பணியாற்றத் தயாராய் இருக்கிறது என்று அதன் தலைமைச் செயலாளர் அர்செனியோ டொமிங்கெஸ் கூறினார்.

ஹொர்முஸ் நீரிணை, ஓமான் வளைகுடா, பெர்‌ஷிய வளைகுடா ஆகியவை போர் நடக்கும் இடங்களுக்கு நிகரான பகுதிகள் என்று கடல்துறை வகைப்படுத்தியுள்ளது. அதனால், எரிசக்தி ஏற்றுமதி, இறக்குமதிக்கு முக்கியப் பகுதிகளாக விளங்கும் இவற்றின்வழி பயணம் செய்யக் கப்பல் ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி போர் மூண்டதிலிருந்து கப்பல்கள் சம்பந்தப்பட்ட ஏழு சம்பவங்களை அனைத்துலகக் கடல்துறை அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் இருவர் கொல்லப்பட்டனர், எழுவர் காயமுற்றனர்.

“இந்தத் தாக்குதல்களால் ஏற்படும் பொருளியல் ரீதியான பாதிப்பு ஒருபுறம் இருக்க இது மனிதாபிமானப் பிரச்சினையாகவும் இருக்கிறது. இதில் அப்பாவி கப்பல் ஊழியர்கள் தாக்கப்படுவது முறையல்ல,” என்று திரு டொமிங்கெஸ், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சொன்னார்.

“பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும்போது அதிகபட்ச கவனத்துடன் இருக்குமாறு நான் மறுபடியும் வலியுறுத்துகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹொர்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட முழுமையாக மூடிவிட்டது. அந்தப் பகுதி வழியாகத்தான் உலக நாடுகள் பயன்படுத்தும் கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பகுதியும் எல்என்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவின் பெரும்பங்கும் கொண்டு செல்லப்படுகின்றன. டென்மார்க்கைச் சேர்ந்த மெர்ஸ்க் உட்பட பல கப்பல் நிறுவனங்கள் மத்திய கிழக்குப் பகுதிக்கான பதிவுகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டுள்ளன.

ஹொர்முஸ் நீரிணை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரானின் புரட்சிக் காவல்படை கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) அறிவித்தது. கூடுதல் கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

சென்ற வாரத்திலிருந்து ஹொர்முஸ் நீரிணைவழியே செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்ததாக எரிசக்தித் தகவல் நிறுவனமான கப்லெர் (Kpler) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்