இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கியப் பேச்சுவார்த்தையைப் பாகிஸ்தான் அடுத்த வாரம் நடத்தவுள்ளது.
அதில் சவூதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் கலந்துகொள்ளவிருப்பதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தார்.
மேலும், நான்கு நாடுகள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றைப் பாகிஸ்தான் தலைமையேற்று மார்ச் 30ஆம் தேதி நடத்தும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
அதில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை,” என்றார் அவர்.
ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் பாகிஸ்தான், தற்போது இரு தரப்பிற்கும் இடையே சமரசப் பேச்சு நடத்தும் தூதராக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப், ராணுவத் தளபதி பீல்டு அமீன் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். அதேசமயம் ஈரானுடனும் பாகிஸ்தானுக்கு நீண்டகாலத் தொடர்புகள் உள்ளன.

