புத்ராஜெயா: மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் மலேசியா முக்கியப் பங்கை வகிக்க முடியும் என்று அந்நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் ஈரானின் தலைமையுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியாகத் தமது நாட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“மத்திய கிழக்கு மற்றும் அரபு உலகில் உள்ள தலைவர்கள் பலரும் தங்களின் கவலைகளைத் தெரிவிக்க எங்களது கருத்துகளையும் உதவியையும் நாடியுள்ளனர்,” என்று மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசுடன் ஏப்ரல் 16ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் திரு அன்வார் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டு விலைகள் அதிகரித்துள்ளதையடுத்து, இடையூறு இல்லாத கடற்போக்குவரத்துக்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை திரு அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
வல்லரசுகள் உட்பட பிற நாடுகள், மற்ற நாடுகளுக்கு எதிரான பகைமை, தாக்குதல்கள் மற்றும் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உத்தரவாதங்களை வழங்கவேண்டும் எனத் தமது நாடு விரும்புவதாகவும் அவர் கூறினார்.
நடுநிலைத் தரப்பாக மலேசியா அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், ரஷ்யாவுடனான தங்களின் உறவைக் குறிப்பிட்டு, அதே வேளையில் அமெரிக்காவைத் தங்களின் மிகப் பெரிய முதலீட்டாளராகத் தொடர்ந்து தக்கவைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மலேசியா ஈரானுடன் நீண்டகாலக் கூட்டுறவு உறவுகளைக் கொண்டுள்ளது.
ஆசியாவில் உள்ள முக்கிய விவசாயப் பொருளியல்களுக்கு விநியோகத் தடைகள் பாதிப்பு விளைவிப்பதால், உள்நாட்டுத் தேவை பூர்த்தியான பிறகு உபரியாக உள்ள டீசலை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதில் மலேசியா முன்னுரிமை அளிக்கும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.
மலேசிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியம் நேஷனல், ஆஸ்திரேலியாவின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார். ஆனால் குறுகிய காலகட்டத்துக்கும் நீண்ட காலகட்டத்துக்கும் இடையிலான காலகட்டத்துக்கு மலேசியாவின் விநியோகம் போதுமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புருணை, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து கூடுதல் டீசல் விநியோகத்தை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளதாகத் திரு அல்பனீஸ் கூறினார். அதே செய்தியாளர் கூட்டத்தில் மலேசியாவுடனான தனது திரவ இயற்கை எரிவாயு ஒப்பந்தங்களை மதித்துச் செயல்பட ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது என்றும் திரு அன்வார் கூறினார்.

