தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் லேசான நிலநடுக்கம்; அண்டை மாநிலங்களிலும் நில அதிர்வு

2 mins read
26b9512f-a07b-43ab-bd8a-bd3abcb51b21
காலை 6.13 மணியளவில் சக்தி குறைந்த நிலநடுக்கம் ஜோகூரைத் தாக்கியது. - படம்: ஜிம்மி புவா/ எக்ஸ்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 6.13 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 எனப் பதிவானதாக மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சிகாமட்டிற்கு ஐந்து கிலோமீட்டர் மேற்கே, பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சிங்கப்பூரிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் சிகாமட் அமைந்திருக்கிறது.

ஜோகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பாகாங் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

காலை 9 மணிக்கு இரண்டாம் முறையாக 2.8 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்முறை அது குளுவாங்கின் வடகிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் அது மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற கட்டடங்களிலிருந்து விலகியிருக்குமாறும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குச் செவிமடுக்குமாறும் பொதுமக்களை ஜோகூர் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஜோகூர் முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, சிகாமட் மாவட்ட அதிாரியான முகம்மது இஸ்ஸுதீன் சனுசியைத் தொடர்புகொண்டு உயிருடற்சேதமோ பொருட்சேதமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

காலை 6.13 மணிக்குத் தமது வீடு அதிர்ந்ததாக பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஜாலான் தாசெக் அலாய் பகுதியைச் சேர்ந்த திரு நூர் ஹஃபிஸ் முக்மின், 32.

அதிர்வு சில நொடிகள் நீடித்ததாகக் குறிப்பிட்ட அவர், “என் வீடு இடிந்துவிழப் போவதாக நினைத்தேன். அச்சத்தில் என் மனைவி, குழந்தையுடன் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினேன்,” என்றும் சொன்னார்.

இதனிடையே, சிகாமட்டிலும் குளுவாங்கிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தொலைத்தொடர்புச் சேவை பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று தொடர்புத் துணை அமைச்சர் டியோ நீ சிங் தெரிவித்தார்.

தீபகற்ப மலேசியா குறைந்த அளவிலான நில அதிர்வுகளை சந்தித்து வருகிறது. அந்தப் பகுதியில் நில அதிர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று அதன் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

1922ல் ஜோகூர் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவ்வாண்டு ஜனவரியில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 எனப் பதிவான இன்னொரு நிலநடுக்கம் பிப்ரவரியில் நிகழ்ந்தது.

2007 நவம்பர் 30க்கும் 2008 ஜனவரி 14க்கும் இடைப்பட்ட காலத்தில் புக்கிட் திங்கியின் பல இடங்களில் 13 முறை நிலநடுக்கம் பதிவானது.

குறிப்புச் சொற்கள்