வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தைவானுக்கான $400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதாக ‘த வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு தெரிவித்துள்ளது.
சீனாவுடன் வர்த்தகம் பற்றியும் உத்தேச உச்சநிலைச் சந்திப்பை நடத்துவது பற்றியும் கலந்துரையாடிவரும் அமெரிக்கா, அண்மை மாதங்களில் தைவானுக்கான உதவி நிதிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
உதவித் தொகுப்புத் திட்டத்துக்கான தீர்மானம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டார்.
திரு டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இம்மாதம் 19ஆம் தேதி வரி விதிப்பு, டிக்டாக் செயலி தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை குறித்து தொலைபேசியில் உரையாடவிருக்கின்றனர்.
தைவானை ஒரு தனி நாடாக அங்கீகாரம் வழங்குவதை அமெரிக்கா 1970களில் கைவிட்டது. இருப்பினும், தைவானுக்கு ஆயுதங்களை அனுப்பி ஆதரவுதரும் நாடாக அமெரிக்கா நீடிக்கிறது.
முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சியின்கீழ், $2 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் திட்டத்தைத் தைவானுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
ஆனால், திரு டிரம்ப் கட்டணம் இல்லாமல் ஆயுதங்களை அனுப்பும் நடைமுறையை ஆதரிக்கப்போவதில்லை என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு குறிப்பிட்டது.
ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகள், உணர்கருவிகள் உள்ளிட்ட பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கான தொகுப்புத் திட்டம் குறித்து கலந்துபேச அமெரிக்க, தைவான் தற்காப்பு அதிகாரிகள் ஆகஸ்ட் மாதம் அலஸ்காவில் சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் மாதத்தில் தைவானுக்குச் சென்ற அமெரிக்க செனட் ஆயுதச் சேவை குழுவின் தலைவர், அமெரிக்காவும் தைவானும் தொடர்ந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கும் என்பதில் உறுதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“தைவான் தொடர்ந்து சுதந்திரத்துடன் இருந்து சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று தைவானிய அதிபர் லாய் சிங்-டெவுடன் பேசியதை அடுத்து குடியரசு உறுப்பினர் ரோஜர் விக்கர் தெரிவித்தார்.