மியன்மார் தேர்தலில் வென்றதாக ராணுவ ஆதரவுக் கட்சி அறிவிப்பு

3 mins read
4497842a-e9be-42d6-b9f8-f1ccb94784ac
மியன்மாரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நிறைவடைந்தது - படம்: இபிஏ
multi-img1 of 3

யாங்கூன்: மியன்மாரில் ராணுவ ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரம் திங்கட்கிழமை (ஜனவரி 26) ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.

வேறு பெயரில் அமையும் ராணுவ ஆட்சி என்று கண்காணிப்பாளர்கள் தேர்தலை நிராகரித்துள்ளனர். முன்னதாக மியன்மார் தேர்தலை அங்கீகரிக்காது என்று ஆசியான் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

உள்நாட்டுப் போர், கலவரங்களுக்கு மத்தியில் மியன்மாரில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு அதிகாரத்தை திரும்பத் தரும் என்ற உறுதியளிப்புடன் தேர்தலை அறிவித்தது. மூன்று கட்ட வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நிறைவடைந்தது.

ஜனநாயக அடையாளமாகத் திகழும் நோபெல் பரிசு பெற்ற பிரபலமான தலைவர் ஆங் சான் சூச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவரது கட்சி கலைக்கப்பட்ட நிலையில், அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை நீடிக்க ராணுவம் வாக்குகளைத் திரட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துரைத்தனர்.

கிளர்ச்சிப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் பெரும் பகுதிகளில் வாக்களிப்பு நடத்தப்படவில்லை.

“நாங்கள் ஏற்கெனவே பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளோம்,” என்று ராணுவத்திற்குத் தொடர்புடைய யுஎஸ்டிபி (USDP) கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். முன்னோட்ட முடிவுகளை வெளியிடும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பதால் அவர்கள் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.

“புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளோம்,” என்றார் அந்த அதிகாரி.

ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்ட யுஎஸ்டிபி கட்சி, ஜனநாயகப் போர்வையிலுள்ள ராணுவக் கட்சி என்றும் அதன் ஆட்சிக்கு சட்டபூர்வத்தன்மையை வழங்க தேர்தல் எனும் நாடகத்தை நடத்தியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

“தேர்தலுக்கு முன்னரே அவர்கள் வெற்றிபெற்று விட்டார்கள்,” என்றார் பெயர் வெளியிட விரும்பாத 28 வயது யங்கூன்வாசி.

“அவர்கள் மட்டுமே போட்டியிட்டனர். அவர்களே பார்வையாளர்கள். அவர்கள் அமைக்கும் ஆட்சியில் எவருக்கும் நம்பிக்கை இருக்காது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் அதிகாரபூர்வ முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

முந்தைய ராணுவ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் விதிமுறைகளின் கீழ், தேர்ந்தெடுக்கப்படாத கால் பகுதி நாடாளுமன்ற இடங்கள் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும்.

மார்ச் மாதம் நாடாளுமன்றம் கூடிய பின்னர், ஒருங்கிணைந்த அவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிபரை தேர்ந்தெடுப்பார்கள்.

தேர்தலை சமரசத்துக்கான ஒரு வாய்ப்பாக ராணுவம் கூறியிருந்தாலும், கிளர்ச்சிப் பிரிவுகள் அதை சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையாகக் கருதுகின்றன. தேர்தல் உள்நாட்டுப் போரை தடுப்பது சாத்தியமில்லை என்று கண்காணிப்பாளர்கள் கூறினர்.

எதிர்ப்பு அல்லது தேர்தலை விமர்சிப்பது புதிய சட்டத்தின்படி குற்றமாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

சிறைகளில் 22,000க்கும் அதிகமானோர் மோசமான நிலையில் உள்ளதாக அரசியல் கைதிகள் கண்காணிப்புக் குழுவின் உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி 83 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, சில மாதங்களிலேயே ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக பேரளவில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்க ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. 2021ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90,000 பேர் கொல்லப்பட்டனர். 3.5 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்தனர். உள்நாட்டுப் போர் வெடித்தது.

குறிப்புச் சொற்கள்