ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ராணுவ அதிகாரிகள் கைது: மலேசியா

2 mins read
e45f3641-8893-4b9c-b90a-85240ca1b1d2
ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ‘ஓப்ஸ் சோஹோர்’ எனும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. - படம்: மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம், பேரளவிலான ஆயுதக் கடத்தல் கும்பலின் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. நாட்டின் தென்பகுதியில் செயல்படும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகளின் தலைமையில் கும்பல் செயல்படுவதாக நம்பப்படுகிறது.

ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு, ‘ஓப்ஸ் சோஹோர்’ எனும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

அதில், ஐந்து மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர் உட்பட ஐந்து பொதுமக்களும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பிடிபட்டதாகத் தகவல்கள் கூறின.

அவர்கள் 30லிருந்து 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள். புதன்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் சிக்கினர்.

பிடிபட்ட அதிகாரிகள் ஆயுதப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் இருவர் அதே பிரிவிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் என்றும் கூறப்பட்டது.

அவர்கள் கடத்தல் நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்க உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்னர். ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டு சட்டவிரோதமாக 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான தொகையைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பிடிபட்ட சந்தேக நபர்கள், ராணுவச் செயல்பாட்டு தகவல்களைக் கடத்தல்காரர்களிடம் அம்பலபடுத்தி போதைப்பொருள், சிகரெட்டுகள் உட்பட அண்டை நாடுகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருள்களை நாட்டுக்குள் கொண்டுவந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அந்தக் கடத்தல் சம்பவங்கள் மூலம் ஒரு மாதத்தில் பெறப்பட்ட தொகை 5 மில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப்படுகிறது.

கைதான சந்தேக நபர்கள், ஒவ்வொரு கடத்தலுக்கும் 30,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.

ஆண்டு முழுக்க மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 63,000 ரிங்கிட் ரொக்கம், பல பொட்டலங்களில் போதைப்பொருள், எடையை அளவிடும் கருவிகள், மதுபானங்கள், போலித் துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மூத்த அதிகாரி ஈடுபட்ட கடத்தல் கட்டமைப்பு மிகப் பெரியது, சிக்கலானது, களைப்பதற்குச் சிரமமானது என்று சில வட்டாரங்கள் குறிப்பிட்டன.

சோதனையின்போது உரிய பயண ஆவணமின்றி பிடிபட்ட இந்தோனீசியப் பெண் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

சந்தேக நபர்கள் அனைவரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) புத்ராஜெயா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

குறிப்புச் சொற்கள்