கோலாலம்பூர்: ராணுவக் கொள்முதல் திட்டங்கள் தொடர்பான லஞ்ச ஊழல் புகாரில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பல நிறுவனங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது.
இவ்விவகாரம் தொடர்பில் மலேசிய ராணுவத் தளபதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இச்சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
விசாரணையின் ஒரு பகுதியாக, சந்தேகப் பேர்வழி ஒருவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் உரிய ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று ஆணையத்தின் தலைவர் ஆஸம் பாக்கி தெரிவித்தார்.
சந்தேகப் பேர்வழி அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறித்த எத்தகவலையும் அவர் வெளியிடவில்லை. ஆயினும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடந்துவருவதாக அவர் கூறினார்.
“உரிய ஆவணங்களையும் சான்றுகளையும் பெறும் நோக்கில் லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படும் நிறுவனங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்,” என்று ஓர் அறிக்கை வழியாகத் திரு ஆஸம் தெரிவித்தார்.
மலேசிய ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது ஹஃபிசுதீன் ஜந்தான் டிசம்பர் 27ஆம் தேதியிலிருந்து உடனடியாக விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.
கடந்த 2023-2025 காலகட்டத்தில் இடம்பெற்ற ராணுவக் கொள்முதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மூவரின் வாக்குமூலத்தை ஊழல் தடுப்பு ஆணையம் பதிவுசெய்தது என்று சென்ற வாரம் பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.
மதிப்புமிக்க ஒப்பந்தங்களைப் பல நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் பெற்றது முதற்கட்ட மறுஆய்வில் கண்டறியப்பட்டது எனத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாகவும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது.

