மாஸ்கோ: ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, உக்ரேன் போருக்காக அதிபர் விளாடிமிர் புட்டின் புதிய ராணுவத் திரட்டலை அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால் ரஷ்ய மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சம் ரஷ்ய அதிபர் மாளிகை, ராணுவ ஆட்சேர்ப்பு மையங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் பரவியுள்ளது.
அண்மைய மாதங்களில் அரசாங்க அதிகாரிகள் பலர் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், சொத்துகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் முயன்று வருவதோடு, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.
தனக்கு அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று திரு புட்டின் மறுத்தாலும், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 3,00,000 பேரை ராணுவத்தில் சேர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக ஐரோப்பியப் பாதுகாப்புப் படை நம்புகிறது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த முந்தைய ராணுவ அணிதிரட்டல் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், பல்லாயிரக்கணக்கானோரை ரஷ்யாவிலிருந்து வெளியேறச் செய்தது.
அதனால் இம்முறை அதுபோல முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது.
2022ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடைபெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்று நாள் வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது.
