சோல்: தென்கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை டிசம்பர் 3ஆம் தேதி இரவு அவர் வெளியிட்டார். அறிவித்த ஆறு மணி நேரத்தில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை ராணுவ ஆட்சி சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது.
நாட்டில் சலசலப்பை ஏற்படுத்திய அதிபரின் இந்த நடவடிக்கை மீதான விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்க அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தென்கொரிய ஆட்சியாளர்களைச் செயல்படவிடாமல் தடுத்ததற்கு அதிபரின் உத்தரவே காரணம் என அதிகாரிகள் சாட்சியம் அளித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

