மட்ரிட்: ஸ்பெயின் நாட்டிற்குப் போப் லியோ ஒரு வாரப் பயணமாகச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, தலைநகர் மட்ரிட்டின் வீதிகளிலும் அதன் முக்கியச் சதுக்கத்திலும் போப் லியோவைக் காண்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) காலை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.
அவரது வருகையின் மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்படும் திறந்தவெளி திருப்பலியில் பங்கேற்க ஏறத்தாழ 1.2 மில்லியன் பேர் அங்குள்ள சிபேலஸ் சதுக்கத்தில் கூடினர்.
போப் லியோ தனது ‘போப்மொபைல்’ வாகனத்தில் சென்றபோது, மக்கள் கொடிகளை அசைத்து வாழ்த்தொலி எழுப்பினர்.
மட்ரிட் நகர மேயரிடமிருந்து அந்நகரத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட போப் லியோ, “மட்ரிட் என்றென்றும் எல்லாரையும் வரவேற்கும், அனைவரையும் உள்ளடக்கிய நகரமாகத் திகழ்ந்து, அங்கு உண்மையான மனித விழுமியங்களால் ஈர்க்கப்படும் சமூக வாழ்வு மலரட்டும்,” என்று வாழ்த்தினார்.
இத்தாலிக்கு வெளியே ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றுக்கு அவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுதான்.
ஜூன் 6 முதல் 12 வரை இடம்பெறும் இப்பயணத்தில், பார்சிலோனா மற்றும் கேனரி தீவுகளுக்கும் அவர் செல்லவிருக்கிறார். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஆபத்தான முறையில் கடல்கடந்து அங்குத் தஞ்சமடைந்துள்ள புலம்பெயர்ந்தோரையும் சந்திக்கவுள்ளார்.
தமது இந்தப் பயணம் ‘ஒவ்வொரு மனிதனையும்’ மதிப்பது தொடர்பில் உலகிற்கு முன்மாதிரியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று தலைவர்களையும் வலியுறுத்தினார்.

