காங்கோ: ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடந்த வாரம் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 200க்கும் அதிகமானவர்கள் மாண்டனர்.
ரூபாயா சுரங்கம் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது. அதை AFC/M23 என்னும் கிளர்ச்சிக் குழு 2024ஆம் ஆண்டு முதல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
சுரங்கத்தில் புதன்கிழமை (ஜனவரி 28) சரிவு ஏற்பட்டது.
விபத்து குறித்து வெள்ளிக்கிழமை மாலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கிளர்ச்சிக் குழுவின் பேச்சாளர் தகவல் கொடுத்தார்.
உலகில் தயாரிக்கப்படும் மொத்த கோல்டன் (coltan) கனிமத்தில் ரூபாயா சுரங்கம் மட்டும் 15 விழுக்காட்டை வழங்குகிறது.
கைப்பேசிகள், கணினிகள், விமானங்கள் ஆகியவற்றின் பாகங்களைச் செய்வதற்கு கோல்டன் கனிமம் மிக முக்கியமானது.
“200க்கும் மேற்பட்டவர்கள் சுரங்க விபத்தில் சிக்கினர். சுரங்க ஊழியர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் சரிவில் மாண்டனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 20 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது,” என்றார் பேச்சாளர்.
“இப்போது மழைக்காலம் என்பதால் சுரங்கப் பாதைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அதனால் மண்சரிவு ஏற்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் மரண எண்ணிக்கை ஏற்கெனவே கூறியதைவிட அதிகமாக இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ரூபாயா சுரங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்குத் தினமும் ஒரு சில டாலர்கள் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

