வெளிநாட்டு மோசடிகளில் இந்தோனீசியர்கள் சம்பந்தப்பட்ட 15,000 வழக்குகள் பதிவு: அமைச்சர்

வெளிநாட்டு மோசடிகளில் இந்தோனீசியர்கள் சம்பந்தப்பட்ட 15,000 வழக்குகள் பதிவு: அமைச்சர்

படம்: ஏபி

25 Nov 2026 - 1:13 pm

2 mins read

ஜகார்த்தா: வெளிநாடுகளில் நடக்கும் இணைய மோசடி நடவடிக்கைகளில் இந்தோனீசியக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட 15,164 வழக்குகள் இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அர்மநாதா நசீர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தெரிவித்துள்ளார்.

அது 2025ஆம் ஆண்டு முழுவதும் பதிவான மொத்த எண்ணிக்கையைவிட ஒரு மடங்கிற்குமேல் அதிகம் என்றும் அவர் கூறினார்.

‘பாசே’ நகரில் சந்தேகத்திற்குரிய பொட்டல மோசடி நடுவத்திலிருந்து மீட்கப்பட்ட 139 இந்தோனீசியர்களைப் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நாடுகடத்திய நிலையில், அந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு நடந்துவந்த சந்தேகத்திற்குரிய பொட்டல மோசடி நடவடிக்கையின் தொடர்பில் பிலிப்பீன்ஸ் தேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வு, கண்டறிதல் குழு நவம்பர் 3ஆம் தேதி சோதனை மேற்கொண்டது. அப்போது மீட்கப்பட்டவர்களில் அவர்களும் அடங்குவர் என்று ‘ஏபிஎஸ்-சிபிஎன்’ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தோனீசிய அதிகாரிகள் அவர்களைத் தேடப்படும் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு, தாயகம் திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர். அங்குச் சந்தேகத்துக்குரிய குற்றச் செயல்களுக்காக அவர்கள்மீது வழக்குத் தொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனீசிய நீதித்துறை மூலம் அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு ஆதரவு அளித்து வருவதாக ‘அன்டாரா’ (Antara) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“காவல்துறைத் தரவுகளின்படி, மணிலாவில் செயல்பட்டுவந்த இந்த மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 87 காவல்துறைப் புகார்கள் இந்தோனீசியாவில் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு கிட்டத்தட்ட 46.8 பில்லியன் ரூப்பியா (2.56 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும்,” என்று திரு அர்மநாதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்