தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுக் இந்தான் விபத்தில் கலகத் தடுப்பு அதிகாரிகளின் மறைவுக்கு அமைச்சர்கள் இரங்கல்

2 mins read
ed102350-d57d-4438-b2aa-8f547dc04111
செவ்வாய்க்கிழமை (மே 13) அதிகாலை ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பம் சந்திப்பில் எஃப்ஆர்யு லாரியும் கல் ஏற்றப்பட்ட லாரியும் விபத்துக்குள்ளானது.  - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: பேராக்கின் தெலுக் இந்தானில் நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் எட்டு கலகத் தடுப்பு காவல்துறைப் பணியாளர்கள் (எஃப்ஆர்யு), ஒரு லாரி ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்ததற்கு மலேசிய அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் இந்தச் செய்தி மனவேதனை அளிக்கிறது என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை (மே 13) அதிகாலை ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பம் சந்திப்பில் எஃப்ஆர்யு லாரியும் கல் ஏற்றப்பட்ட லாரியும் விபத்துக்கு உள்ளாயின.

“இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

மரணமடைந்த எஃப்ஆர்யு பணியாளர்கள் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என்று சைஃபுதீன் நசுஷன் கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், எஃப்ஆர்யு பணியாளர்களை ‘தேசிய வீரர்கள்’ என்று வர்ணித்து, இதே உணர்வை எதிரொலித்தார்.

இந்தத் துயரச் சம்பவம் மிகவும் கவலையளிப்பதாகவும், அனைத்து மலேசியர்கள் மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ஒரு தனி பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சரியான தகவல்களைத் தெரிவிப்பதற்கும், இந்தச் சம்பவம் தொடர்பான தவறான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கும் தகவல் தொடர்பு அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

பாறைகளை ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட இயக்குச் சக்கரக் (ஸ்டீயரிங்) கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பேராக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எஃப்ஆர்யு பணியாளர்கள் யூனிட் 5ஐச் சேர்ந்தவர்கள் என்றும் சம்பவம் நடந்த நேரத்தில் லாரியில் இருந்த 15 அதிகாரிகளில் அவர்களும் அடங்குவர் என்றும் அதிகாரிகள் கூறினர்.

மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் அரசியார் ராஜா ஸரித் சோபியாவும் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த எஃப்ஆர்யு பணியாளர்களின் குடும்பத்தினருக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்