கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை அண்மையில் தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சருமான திரு அன்வார் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டம் அனைத்து மலேசியர்களுக்குமானது என்றும் எந்தச் சமூகமும் ஒதுக்கப்படவில்லை என்றும் தொழில்முனைவர் மேம்பாட்டு, கூட்டுறவுகள் துணை அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் மலேசிய இந்தியச் சமூகத்துக்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் திரு அன்வார் ஒதுக்கியது குறித்து சிலர் அதிருப்திக் குரல் எழுப்பியிருந்தனர். மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதற்குத் துணை அமைச்சர் ரமணன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“ஒதுக்கப்படும் நிதியை இனரீதியிலான பார்வையில் பார்க்க வேண்டாம் என்று பிரதமர் அன்வார் பலமுறை கூறிவிட்டார். மலேசிய இந்தியர்களுக்கு 130 மில்லியன் ரிங்கிட் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக ஒருசாரார் கூறுகின்றனர். அப்படியென்றால் சுகாதாரப் பராமரிப்புக்காகப் பிரதமர் ஒதுக்கியுள்ள தொகை மலேசிய இந்தியர்களுக்குக் கிடைக்காது என்று அவர்கள் கூறுகிறார்களா?
“கல்வி அமைச்சுக்காக 64 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேசிய பள்ளிகளுக்கா அல்லது சீனப் பள்ளிகளுக்கா? இல்லை, இத்தொகை அனைத்து பள்ளிகளுக்கும், அனைத்து சமூகங்களுக்கும் உரியது,” என்று அக்டோபர் 21ஆம் தேதியன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
இவ்வாறு பொறுப்பற்ற வகையில் கருத்துரைப்பவர்கள் கூறுவதைக் கேட்டு ஏமாற வேண்டாம் என்று அவர் மலேசிய இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.
அரசாங்க அறிவிப்புகளை நன்கு ஆராய்ந்த பிறகு அவை குறித்து கருத்து தெரிவிக்கும்படி அவர் நினைவூட்டினார்.
மலேசிய இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 130 மில்லியன் ரிங்கிட் தொகையைக் கொண்டு அவர்களது பொருளாதார நிலையை உயர்த்த முடியுமா என்று எதிர்க்கட்சி ஒன்றின் தலைவர் கேள்வி எழுப்பியிருந்ததாக மலேசிய ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.