இலங்கை சிறைக் கலவரத்துக்கு அமைச்சர் பொறுப்பேற்பு

இலங்கை சிறைக் கலவரத்துக்கு அமைச்சர் பொறுப்பேற்பு

படம்: ஏஎஃப்பி

07 Jul 2026 - 5:02 pm

1 mins read

கொழும்பு: இலங்கையில் அண்மை ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழ்ந்த மிக மோசமான சிறைக் கலவரத்தில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதற்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்புக்கு வடக்கே உள்ள கடலோர நகரான நீர்கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் நீடித்த வன்முறையில், கைதிகள், அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, கலகத் தடுப்புப் பிரிவினர், ராணுவம், ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்பதற்காக ஆகாயப்படை ஆகியவற்றை அதிகாரிகள் களமிறக்கினர்.

தற்போது நிலைமை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு நாணயக்கார, உயிரிழப்புகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“உயிரிழப்புகள் சொல்லொணா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அளவற்ற துயரமும் மனவுளைச்சலும் ஏற்பட்டுள்ளது. ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

“இது எங்களது அதிகாரிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை கைதிகள், அதிகாரிகள் என இருதரப்பையும் சார்ந்தது,” என்றார் திரு நாணயக்கார.

அங்கு என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய அதிகாரிகள் முழு விசாரணை நடத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
கலவரம்இலங்கைஉயிரிழப்பு