பள்ளி சமூகத்திற்கான உளவியல் சமூக ஆதரவைக் கல்வி அமைச்சு வலுப்படுத்தும்

பள்ளி சமூகத்திற்கான உளவியல் சமூக ஆதரவைக் கல்வி அமைச்சு வலுப்படுத்தும்

2 mins read
4fb62552-ec59-47f9-9627-b0a52cb10ae9
ஆசிரியர்களின் நலத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் வலியுறுத்தினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: சிலாங்கூரில் அண்மையில் பெண் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பள்ளி சமூகத்திற்கான உளவியல் சமூக ஆதரவை வலுப்படுத்த கல்வி அமைச்சு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக், ஒரு மனநல ஆர்வலராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதால், இந்தச் சம்பவம் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் கவலைகளைப் புரிந்துகொள்வதாகவும் கூறினார்.

அரசு சாரா அமைப்புகள், சுகாதார அமைச்சு, ஆலோசகர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், கல்வி சமூகத்தின் மனநலத்திற்கு அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“நாம் செய்யவேண்டியவை இன்னும் நிறைய உள்ளன. அவற்றை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து செய்வோம். நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர்களே, நீங்கள் தனியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்,” என்று அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) ஒரு ஃபேஸ்புக் பதிவில் கூறினார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும், யூகங்களைத் தவிர்த்து, சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய காவல்துறை ஒரு முழுமையான விசாரணையை நடத்த அவகாசம் அளிக்குமாறும் ஃபத்லினா அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஆசிரியர்கள் ஒருவரையொருவர் நலம் விசாரிக்கவும், அவர்கள் சொல்வதைக் கேட்கவும், தங்கள் சக ஆசிரியர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“சில சமயங்களில், ஓர் எளிய மற்றும் நேர்மையான விசாரணை மிகுந்த வலிமையைத் தரும்,” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று, சிலாங்கூரில் உள்ள ஹுலுவில் ஒரு பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்
கல்விஆசிரியர்கள்சுகாதார அமைச்சு