பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் தாதியருக்குக் கொடுக்கப்பட்ட சீருடைகள் பற்றிய புகார்களை அந்நாட்டுச் சுகாதார அமைச்சு விசாரித்து வருகிறது.
சென்ற ஆண்டு 98.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தின்கீழ் தாதியருக்குக் கொடுக்கப்பட்ட சீருடைகளின் தரம் குறைவாக உள்ளதாக நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதில் ஒன்றில் குறிப்பிடப்பட்டது.
‘பெலுவாங் கிரிஸ்டல்’ நிறுவனம் கொடுத்த துணியின் மாதிரிகள் வேதியியல் துறைக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டதாக பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஜுவான் எங்கிற்குப் பதில் அளிக்கையில் அமைச்சு கூறியது.
அந்த முடிவுகளைத் தொடர்ந்து, நிறுவனத்திடமிருந்து விளக்கம் கேட்டு, அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. நிறுவனத்தின் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக அமைச்சு கூறியது.
சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் ஒதுக்கீடு மசோதா 2025 பற்றி விவாதித்தபோது, தரம் குறைவான சீருடைகளைப் பெற்றதாகப் புகார் கொடுத்த அரசாங்கத் தாதியரின் நிலையைப் பற்றி லிம் பேசினார்.
அந்த விவகாரம் குறித்து முதலில் செப்டம்பர் நாடாளுமன்றக் கூட்டத்தில் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஷ்வரன் கேள்வி எழுப்பினார்.
விநியோகிப்பாளர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று லிம் அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
அதோடு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.