பிரிஸ்பேன்: முதலையின் வாய்க்குள் சிக்கிய ஒருவர் பேனா கத்தியைப் பயன்படுத்தி உயிர்தப்பிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.
கெய்ர்ன்ஸ் நகரத்திற்கு அருகே ஹோப் வேல் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முதலை அவர் காலைக் கவ்விக்கொண்டது.
முதலையிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த மரக்கிளையை அவர் பிடித்துக்கொண்டார்.
ஆனாலும் முதலை அவரைத் தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
அப்போது தனது இடுப்புவார்பட்டையில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தான் விடுபடும் வரை, முதலையின் தலையில் பலமுறை குத்தினார்.
அதன் பிறகு கரையில் குதித்து உயிர் தப்பினார். மருத்துவமனையில் ஒரு வார சிகிச்சைக்குப் பின் தற்போது நலமுடன் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
“அதிர்ஷ்டவசமாக நான்கு அடி முதலையிடம் இருந்து அவர் உயிர் தப்பியுள்ளார். கடும் போராட்டத்திற்குப் பிறகு, உயிர் பிழைப்பது அரிதான ஒன்று,” என்று வனத்துறை அதிகாரிகள் கூறினார்.