கோலாலம்பூர்: மலேசிய ராணுவ முகாம்களில் நடந்ததாகக் கூறப்படும் தவறான நடத்தைகளை விசாரிக்க அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் ராணுவ முகாம் தொடர்பான காணொளிகள் பரவி வருகின்றன.
அதில், ராணுவ முகாம்களுக்குள் சிலர் அத்துமீறி நுழைவதாகவும் அங்கு சில ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில தற்காப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தனிப்பட்டவர்கள் அத்துமீறி நுழைவதாகக் கூறப்படுவதையும் தகாத செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுவதையும் கடுமையாகக் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிய உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
“விரிவான விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதைக் கண்டறிய மலேசிய ஆயுதப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றது தற்காப்பு அமைச்சு.
ஆனால் எத்தகைய குற்றச்சாட்டுகள் என்பது பற்றிய விவரங்களை அமைச்சு வெளியிடவில்லை.
அண்மைய நாள்களில் முகாம்கள் பற்றிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
காணொளிக் குற்றச்சாட்டுகள் ஆயுதப் படைகளின் கலாசாரம், மதிப்பு அல்லது நடைமுறைகளைப் பிரதிபலிக்கவில்லை. ஒழுக்கத்தையும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுவது அடிப்படை அம்சங்களாகும் என்று அமைச்சு வலியுறுத்தியது.
“உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது தற்போதைய விதிமுறை, சட்டத்தின்படி உறுதியான, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிக்கை தெரிவித்தது.
ஊகங்ளை நம்ப வேண்டாம் என்றும் விசாரணை நடைபெறுவதால் முன்கூட்டியே எந்தவித முடிவுக்கும் வர வேண்டாம் என்றும் அது பொதுமக்களை கேட்டுக் கொண்டது.
நாட்டின் தற்காப்பு நிலையங்களின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடும் எந்தவொரு நடத்தையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற தற்காப்பு அமைச்சு, தற்காப்புப் படை வீரர்களிடையே ஒழுக்கம், நேர்மையை நிலைநிறுத்துவதற்கான அதன் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியது.

