துபாய்: ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்துகொண்டிருந்த ஐக்கிய அரபு சிற்றரசுகளின் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமான் கடல் எல்லைக்குள் நிகழ்ந்த இத்தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். அதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் இந்தியர்கள், இருவர் உக்ரேன் நாட்டவர்கள்.
தாக்குதலுக்குள்ளான ‘மொம்பாசா’, ‘அல் பஹியா’ ஆகிய இரு கப்பல்களிலும் தீ மூண்டு பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய ஐக்கிய அரபு சிற்றரசுகளின் தற்காப்பு அமைச்சு, இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதற்குப் பதிலடி கொடுக்கும் முழு உரிமை தனக்கு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
அதே வேளையில், தனது எச்சரிக்கையை மீறி, திசைகாட்டும் கருவிகளை அணைத்துவிட்டு, கண்ணிவெடிகள் நிரப்பப்பட்ட பாதையில் பயணம் செய்ய முயன்ற இரு எண்ணெய் கப்பல்கள் முடக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை அறிவித்துள்ளது.
ஈரான் தடை விதித்துள்ள கப்பல் பாதைகளைப் பயன்படுத்துமாறு கப்பல்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டிய ஈரானியப் படை, இதனால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானியக் கப்பல் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் அமைதியை நிலைநாட்ட ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

