ஏவுகணை ஒப்பந்தத் தொகை; திருப்பித் தர நார்வேக்கு மலேசியா வலியுறுத்தல்

ஏவுகணை ஒப்பந்தத் தொகை; திருப்பித் தர நார்வேக்கு மலேசியா வலியுறுத்தல்

2 mins read
1f32673c-ce1f-432c-84be-fd8aacc1373f
மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்தின் (வலது) அண்மையில் நார்வேயின் தற்காப்பு அமைச்சர் டூரே சேண்ட்விக்கைச் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

கோத்தா திங்கி, ஜோகூர்: ரத்து செய்யப்பட்ட ஏவுகணை கொள்முதல் ஒப்பந்தத்திற்கான தொகையை விரைந்து திருப்பித் தர உதவுமாறு மலேசியா நார்வேயைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிலிருந்து நார்வே அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்தின் கூறியுள்ளார்.

அண்மையில், நார்வே தற்காப்பு அமைச்சர் டூரே சாண்ட்விக்கைச் சந்தித்துப் பேசியதாகத் திரு காலிட் தெரிவித்தார்.

நார்வே அரசாங்கம் ஏற்றுமதி உரிமத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததே அந்தப் பிரச்சினைக்கு மூலக் காரணம் என்ற மலேசியாவின் நிலைப்பாட்டை திரு டூரேயிடம் தெரிவித்ததாகத் திரு காலிட் கூறினார்.

ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“மலேசியாவிற்கான ஏற்றுமதி உரிமத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்ற நார்வேயின் முடிவே அத்தனைப் பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம்,” என்று அவர் கூறினார்.

“அதனால், இந்த விவகாரத்தில் நார்வே அதன் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட முடியாது; ஏனெனில், அதன் முடிவுதான் இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது,” என்றார் அவர்.

மலேசியா அதன் கடலோரப் போர்க் கப்பல்களுக்காக வாங்கிய ‘நேவல் ஸ்டிரைக் மிசைல்’ (Naval Strike Missile) ஏவுகணை முறைக்கான ஏற்றுமதி உரிமத்தை வழங்க நார்வே மறுத்தது.

மலேசியாவுடன் இருதரப்பு நல்லுறவைக் கட்டிக்காக்க நார்வே உண்மையிலேயே விரும்பினால், பணத்தைத் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த அது உதவவேண்டும் என்று நார்வே தற்காப்பு அமைச்சரிடம் தாம் தெரிவித்ததாகத் திரு காலிட் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பணத்தைப் திரும்பப் பெறுவதற்கு முன்பாக, நார்வே அரசாங்கம் அந்தத் தொகையை முன்கூட்டியே மலேசியாவிற்கு வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாநார்வேஒப்பந்தம்